Humanoid robot | அசத்தும் முக பாவனைகள்.. அச்சு அசல் மனிதனைப்போல அசத்தும் ஹ்யூமனாய்டு ரோபோ..
இந்த ரோபோவை "உலகின் மிகவும் மேம்பட்ட மனித வடிவ ரோபோ" என்று அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உலகின் மிக அழகான மற்றும் அதிர்ச்சியளிக்கும் சாதனை எதுவென்றால் ..நான் humanoid robot என அழைக்கப்படும் மனித ரோபாக்களின் வளர்ச்சியைத்தான் சொல்வேன் . நாளுக்கு நாள் உலகின் வளர்ந்த நாடுகளின் ஏதோ ஒரு மூலையில் மனிதர்களுக்கு இணையான ரோபோவை உருவாக்கும் முயற்சியில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இது ஒரு புறம் இருந்தால் மனிதர்களுக்கு இணையாக , ரோபோக்களும் குடியுரிமை வழங்க தொடங்கியுள்ளது சவுதி அரேபியா போன்ற நாடுகள். ஏற்கனவே பெப்பர் ரோபட், சோஃபியா ரோபட் , சோஃபியாவின் தங்கை கிரேஸி என நாளுக்கு நாள் ரோபோவுக்குமே உறவு முறைகளுடன் குடும்பத்தை உருவாக்குறான் மனிதன். இது வளர்ச்சியின் மீதான பிரம்மிப்பாக பார்ப்பதா, மனித குலத்திற்கான வீழ்ச்சியாக பார்ப்பதா என்பதுதான் மிகப்பெரிய விவாதமே!
சரி விஷயத்துக்கு வருவோம்!...என்ஜினியரிங் ஆர்ட்ஸ் என அழைக்கப்படும் A U.K. robotics நிறுவனம் தனது முதல் ரோபோவை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. மனித வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவானது அச்சு அசல் மனிதர்களை போலவே முக பாவனைகளை செய்கிறது.அமேகா என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோவின் முகம் கண்கள், கன்னங்கள், வாய் மற்றும் நெற்றி என மனித உறுப்புகளை போல வடிவம் கொண்டுள்ளது.அதன் மூலம் பிரமிப்பு முதல் மகிழ்ச்சி வரையிலான அனைத்து உணர்ச்சிகளையும் பாவனைகளாக வெளிப்படுத்துகிறது அமேகா. இந்த ரோபோவை "உலகின் மிகவும் மேம்பட்ட மனித வடிவ ரோபோ" என்று அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள்.மனிதர்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இருந்துதான் மற்ற விலங்குகளில் இருந்து மாறுபடுகின்றனர். அதனை செயற்கையாகவும் உருவாக்க முடியும் என்பதுதான் மனித ரோபோக்கள் உருவாக்குவதன் மீதான ஈடுபாடு அதிகரிக்க காரணம்.
Ameca humanoid robot ai platform #technology #tech #robot #Humanoids #Ameca #AI #platform #today #ai❤️ pic.twitter.com/1YcLt0EslJ
— F18nati (@F18nati1) December 8, 2021
மேலே உள்ள வீடியோவில் தூங்கி எழும் பொழுது மனிதர்கள் கொடுக்கும் பாவனைகளை அப்படியே கொடுக்கிறது பாருங்கள் அமேகா ! தற்போது உருவாகியுள்ள அமேகா விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, மனித-ரோபோ குறித்தான ஆய்விற்கு உதவி செய்து அதனை மேம்படுத்த உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர் இதை உருவாக்கியவர்கள். அதாவது தன் இனத்தை காக்க தன்னிச்சையாக போராடும் போராளி என்றும் வைத்துக்கொள்ளலாம்.வருகிற ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடைப்பெறவுள்ள CES 2022 என்னும் உலக மின்னணு வர்த்தக கண்காட்சியில் அமேகா காட்சிப்படுத்தப்படவுள்ளது. என்னதாம் அமேகா ஒரு மனிதனைப் போல தோற்றமளித்து நின்றாலும், அதன் முக பாவனைகளை காட்ட முடியும் , கைகளை அசைக்க முடியும் ஆனாலும் அமேக்காவிற்கு எப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனவே விரைவில் அதற்கான கால்களை உருவாக்கி அமெரிக்காவின் தெருக்களில் நடைப்பயில விடுவோம் என்கிறது அமேகாவை உருவாக்கிய நிறுவனம்.