WTC Final : நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : சவுத்தாம்ப்டன் மைதானம் எப்படி ?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் "வேகமும் இருக்கும், பவுன்சூம் இருக்கும், கேரியும் இருக்கும்" மைதானத்தின் தலைமை கியூரேட்டர் சிம்ரான் லீ கொடுத்த ஹின்ட்!
ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா vs நியூசிலாந்து இடையே நாளை தொடங்குகிறது. ஒரு உலக கோப்பை இறுதி போட்டிக்கு என்னென்ன மாதிரியான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுமோ, அதே போல் முதல் முறையாக நடைபெறும் டெஸ்ட் உலக கோப்பை போட்டிக்கும் ஐசிசி அனைத்து விதமான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது இறுதி போட்டி நடைபெறும் சவுதாம்ப்டன் மைதானத்தை தயார் செய்வது. வழக்கமாக தங்கள் நாடுகளில் போட்டி நடைபெறும் போது சொந்த நாடுகள் அவர்களுக்கு ஏற்ற வகையில் மைதானத்தை தயார் செய்து கொள்வார்கள், ஆனால் இங்கே ஆடுகளத்தை தயார் செய்வதற்கென ஐசிசி சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இறுதி போட்டிக்கான மைதானத்தை தயார் செய்து வருகிறார் தலைமை கியூரேட்டர் சிம்ரான் லீ.
இறுதி போட்டியில் ஆடுகளத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் ? - விடை அளித்துள்ள சிம்ரான் லீ!
"என்னைப் பொறுத்தவரை நான் வேகமாகவும், பந்துகள் பவுன்ஸ் ஆகி வரும் வகையிலும், நல்ல கேரி ஆகும் ஒரு ஆடுகளத்தை உருவாக்க விரும்புகிறேன். பல நேரங்களில் இங்கிலாந்து வானிலை அதற்கு ஒத்துழைக்காது, ஆனால் தற்போது வெயில் நன்றாக அடிப்பதால், வேகம் நிறைந்த கடினமான ஒரு ஆடுகளத்தை நிச்சயம் உருவாக்க முடியும் என நம்புகிறோம்"
அப்போ பவுலிங் சாதகமான ஆடுகளமாக இருக்குமா ?
"ஆடுகளம் வேகமாக இருந்தால் தான் டெஸ்ட் கிரிக்கெட் பார்ப்பதற்கு சுவாரசியம் நிறைந்தததாக இருக்கும். நானும் ஒரு கிரிக்கெட் ரசிகன், அதனால் ஒவ்வொரு பந்தையும் பார்க்க தூண்டும் வகையில் ஆடுகளம் இருக்க வேண்டும். ஒரு சிறப்பான கிளாசிக்கல் பேட்டிங் அல்லது சிறப்பான வேகப்பந்துவீச்சை காணலாம்"
அப்போ பேட்ஸ்மேன்களின் நிலை ?
"தொடக்கத்தில் முதல் சில ஓவர்கள் பந்துவீச்சாளர்களை சமாளிப்பதில் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும், அதே நேரம் ஒருதலைப்பட்சமாக வேகத்திற்கு மட்டுமே ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் அமையாது"
ஸ்பின்னர்ஸ் எப்படி ஜொலிப்பார்கள் ?
"வானிலை தற்போது சரியாக இருக்கிறது, இந்த சவுதாம்ப்டன் ஆடுகளம் களிமண்ணுடன் சிறிது மணலும் கலந்து உருவாக்கப்பட்டது. அதனால் பிட்சுகள் மிக விரைவாக வறண்டு போகின்றன, ஆகவே சுழற்பந்து வீச்சுக்கும் இந்த ஆடுகளம் ஒத்துழைக்கும் என நம்புகிறேன்"
ஆக மொத்தத்தில் பேட்டிங், பவுலிங் இரண்டுக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தை கண்டு ரசிக்கும் வகையில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது சவுதாம்ப்டன் மைதானம். இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3 மணி அளவில் டாஸ் வீசப்பட்டு, 3.30 மணி அளவில் இறுதி போட்டி தொடங்கவுள்ளது.