IPL 2021 Updates: ஐபிஎல் போட்டிகள் இங்கிலாந்தில், டி20 உலகக்கோப்பை இந்தியாவில் - பிசிசிஐ திட்டம்!
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் மே 29ம் தேதி கூடி உலகக்கோப்பை டி20 மற்றும் ஐபிஎல் தொடர் குறித்து விவாதிக்க உள்ளது...
டி20 உலகக்கோப்பை போட்டி ஆப்ஷன் ஏ இந்தியாவிலும், ஆப்ஷன் பி ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்த - இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டம். இது குறித்து உரிய முடிவை பிசிசிஐ சிறப்பு பொது குழு கூட்டம் கூடி மே 29ம் தேதி எடுக்கவுள்ளது. ஜூலை மாதம் இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்புகளை வைத்தே உலகக்கோப்பையை எங்கு நடத்தலாம் என்ற இறுதி முடிவு எட்டப்படும், ஆனால் தற்போது வரை டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலைமை மோசமானால், இங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் மட்டுமே உலககோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும் என்று பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது..
மேலும் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மற்றொரு முக்கிய விஷயமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள 31 போட்டிகளை எங்கு நடத்தலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. தற்போது வரை வெளிவரும் தகவலின் அடிப்படையில் இங்கிலாந்திற்கு ஐபிஎல் தொடரின் 2021 தொடரில் போட்டிகள் மாற்றியமைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே ஜூன் மாதம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொள்கிறது.
இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிரிக்கெட் அணிகள் ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் காட்டியுள்ள நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும் அதற்கு தேவையான உதவிகள் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. அதில் முக்கியமாக ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் இங்கிலாந்து ஐடியாவிற்கு இசைவு தெரிவித்துள்ளதால் போட்டிகள் அங்கு நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கு ஏற்ற மாதிரி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்டதாக தீர்மானிக்கப்பட்டுள்ள டெஸ்ட் தொடரில் மற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது..
ஆனால் இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெற்றால், அங்கு சற்று அதிகப்படியான பணத்தை செலவு செய்ய நேரிடும். ஏனினும் இங்கிலாந்தில் தற்போது வரை விளையாட்டை பார்வையிட ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள், அதனால் அந்த இழப்பை இதில் வரும் வருவாய் மூலமாக சரி செய்துகொள்ளலாம் என பிசிசிஐ எண்ணுகிறது..
அதேநேரம் ஐபிஎல் தொடருக்கு இரண்டாவது ஆப்ஷன் பி தயராக உள்ளது, இங்கிலாந்தில் முடியவில்லை என்றால் ஐபிஎல் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்படும். ஆகவே எந்த நிலையிலும் ஐபிஎல் தொடரை முழுவதுமாக நடத்தி முடிப்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் மும்முரம் காட்டி வருகிறது.
ஆக இந்தாண்டு பல விளையாட்டு தொடர்கள் ரத்து செய்யபட்டாலும், கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுவதற்கான மாற்று வழிகள் ஆராயப்படுகின்றன என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகம் ஏற்படுத்த கூடிய செய்தியாக அமைந்துள்ளது...