Avani Lekhara: 11 வயதில் விபத்து... 19 வயதில் வரலாற்றுச் சாதனை... மீண்டு எழுந்த ‛பீனிக்ஸ்’ அவானி லெகாரா!
ஒரே பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் இளம் வீராங்கனை அவானி
ஒலிம்பிக் வரலாற்றில், பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துவர் 19 வயதேயான அவானி லெகரா. டோக்கியோ பாராலிம்பிக் தொடர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் அவானி தங்கப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இது. பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலிலும் இந்தியாவுக்கு இதுவே முதல் தங்கப்பதக்கம். ராஜாஸ்தானைச் சேர்ந்த அவானி லெகாரா, பதக்கம் வென்று வரலாற்றில் தடம் பதித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இன்று நடைபெற்ற மகளிர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம், ஒரே பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் இளம் வீராங்கனை அவானி.
பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். அந்த வகையில், பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ். எச்-1 பிரிவில் பங்கேற்றார் அவர்.
#Tokyo2020 #Paralympics #Shooting #Bronze for @AvaniLekhara 🔥
— Sports For All (@sfanow) September 3, 2021
What an inspiration she’s been! 😢🇮🇳
The 19 year old #IND has finished in 3rd POSITION with a score of 445.9, bagging her 2nd medal in Tokyo! 😍#Praise4Para #Cheer4India #AbJeetegaIndia #SheIsGold
2012-ம் ஆண்டு, தன்னுடைய 11 வயதில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தால், அவானிக்கு முதுகு தண்டு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், மீண்டு எழுந்த அவர் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகளில் கவனம் செலுத்தினார். பீய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவை முன்மாதிரியாக கொண்ட அவானி, துப்பாக்கிச் சுடுதலில் முழுமையாக கவனல் செலுத்த தொடங்கினார். 2017-ம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று தடம் பதித்தார். தற்போது, ரேங்கிங்கில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அவர், எதாவது ஒரு பதக்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதை இப்போது உறுதி செய்துள்ளார்.
ஓடியாட வேண்டிய வயதில் ஏற்பட்ட விபத்தால் துவண்டுபோகவில்லை அவானி. மீண்டு வந்தார், படிப்பிலும் விளையாட்டிலும் இரண்டிலும் கவனம் செலுத்தினார். ஒரு புறம் விளையாட்டில் சர்வதேச ஃபோடியம்களை ஏறி வரும் அவானி, மற்றொரு புறம் சட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு. மீண்டு எழுந்தவர், சரித்தரம் படைத்துள்ளார். இன்னும் நிறைய பதக்கங்களை வென்று குவிக்க வாழ்த்துகள் அவானி!