Squash World Cup: 12 ஆண்டுகளுக்குப் பின்..சென்னையில் கோலாகலமாக தொடங்கிய ஸ்குவாஷ் உலகக்கோப்பை..
உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
”ஸ்குவாஷ் உலகக்கோப்பை”
சா்வதேச ஸ்குவாஷ் சம்மேளனம், இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து, உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடரை நடத்துகின்றன. இன்று தொடங்கி வரும் 17-ம் தேதி வரையில் நடைபெற உள்ள இந்த போட்டிகளை, சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் மால் மற்றும் நேரு பார்க்கில் உள்ள இந்திய ஸ்குவாஷ் அகாடமி உள்ளரங்க மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அணிகளின் விவரங்கள்:
இந்த தொடரில் 8 அணிகள் கலந்துகொண்டுள்ள நிலையில் அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எகிப்து, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் கொலம்பியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், இந்தியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. இரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். நாள்தோறும் 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அரை இறுதி ஆட்டங்கள் 16-ம் தேதி நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி 17-ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது.
வீரர்களின் விவரங்கள்:
ஒவ்வொரு அணி சார்பிலும் தலா 4 பேர் வீதம் மொத்தம் 32 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் இரண்டாவது சீட் அணியாக களமிறங்கும் இந்திய அணி சார்பில், மகளிர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனையும் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஜோஷ்னா சின்னப்பா, இந்தியாவின் இரண்டாம் நிலை வீராங்கனையான தன்வி கண்ணா ஆகியோர் பங்கேற்கின்றனர். அதேநேரம், ஆடவர் பிரிவில் இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான சவுரவ் கோஷல் , இந்தியாவின் இரண்டாம் நிலை வீரரான தமிழகத்தை சேர்ந்த அபய் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
புள்ளிகள் எப்படி?
லீக் சுற்றில் ஒவ்வொரு ஒற்றையர் பிரிவு வெற்றிக்கும் தலா 2 புள்ளிகளும், இரட்டையர் பிரிவு வெற்றிக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். நாக்-அவுட் சுற்றில் ஆட்டம் டிராவானால், வெற்றி பெற்ற செட்களின் அடிப்படையில் வெற்றி, தோல்வி இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும்.
முதல் நாள் போட்டி விவரங்கள்:
தொடக்க நாளான இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜப்பான்-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 1 மணிக்கு எகிப்து-ஆஸ்திரேலியா அணிகளும், 3.30 மணிக்கு மலேசியா-கொலம்பியா அணிகளும் மோத உள்ளன. மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடக்க விழா:
உலகக்கோப்பை ஸ்குவாஷ் எக்ஸ்பிரஸ் மாலில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது தொடருக்கான கோப்பையை அவர் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் ”12 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் ஸ்குவாஷ் உலககோப்பை நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வீரர்கள் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் விளையாடி உள்ளனர். ஸ்குவாஷ் விளையாட்டில் ஆர்வம் உள்ள பொதுமக்கள் நேரில் வந்து பார்வையிட்டு ஊக்கப்படுத்த வேண்டும்” என்றார். தொடர்ந்து, இந்திய வீராங்கணை ஜோஷ்னா மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கணை ஜெசிகாவுடன் பயிற்சி ஆட்டமாக சிறிது நேரம் விளையாடினார்.