Ruthuraj Gaikwad On Dhoni: ”ஒருவருக்குக்கூட தோனி ஓய்வு அறிவிப்பு குறித்து தெரியாது” - மனம் திறந்த ருத்துராஜ் கைக்வாட்..!
"10 முதல் 15 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தோனியுடன் மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தோம், ஆனால் ஒருவருக்கு கூட தோனி ஓய்வுக்குறித்து தெரியவில்லை" - ருத்துராஜ் கைக்கவாட்!
ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த தினம். ஒவ்வொரு இந்தியரும் சந்தோஷமாக கொண்டாடும் அந்த நாளில் சிறிய வருத்தத்துடன் காணப்படுபவர்கள் தோனியின் ரசிகர்கள். அதற்கு காரணம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார்.
மிக சாதாரணமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பாடலை பதிவிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு இருக்கும் போது திடீரென ஓய்வு பெற்றுவிட்டேன் என அறிவித்தார் தோனி. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர், தோனி ஓய்வை அறிவித்தபோது எத்தகைய சுழலும், மனநிலையும் ட்ரெஸ்ஸிங் ரூமில் நிலவியது என்பது குறித்து ருதுராஜ் கைக்கவாட் தற்போது மனம் திறந்துள்ளார்.
தோனி ஓய்வு முடிவை அறிவித்து ஏறக்குறைய 10 மாதங்கள் ஆகிவிட்டன, இந்த நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி என்ன நடந்தது என ருதுராஜ் கைக்கவாட் தெரிவித்துள்ளார். அதில் "10 முதல் 15 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தோனியுடன் மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தோம், ஆனால் ஒருவருக்கு கூட தோனி ஓய்வுக்குறித்து தெரியவில்லை. சாதாரண ஒரு நாளில் எப்படி பயிற்சி மேற்கொள்வோமோ, அதே போன்று தான் அன்றும் பயிற்சி செய்தோம்" என தெரிவித்துள்ளார் ருதுராஜ்.
சமூக வலைத்தளம் மூலியமே தோனியின் ஓய்வை வீரர்கள் அனைவரும் அறிந்துகொண்டோம் என தெரிவித்துள்ளார் ருதுராஜ். "மாலை ஒரு 6.30 மணி இருக்கும், பயிற்சியை முடித்து இருப்போம். 7 மணி போல் தோனியுடன் உணவு உண்ண அமர்ந்தோம், அப்போது திடீரென என்னிடம் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வை அறிவித்துள்ளதாக தெரிவித்தனர். எந்த விதமான ஆலோசனை அல்லது விவரமும் இது குறித்து அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை" என ருதுராஜ் கைக்கவாட் தெரிவித்துள்ளார்.
தோனியிடம் யாருமே ஓய்வு குறித்து பேசவில்லை என தெரிவித்துள்ளார் ருத்துராஜ். அவர் தெரிவிக்கையில் "நான் உட்பட யாருக்குமே தோனியிடம் கேட்க துணிவு வரவில்லை, அனைவருமே வருத்தத்தில் இருந்தோம், இனி தோனியை சர்வதேச கிரிக்கெட்டில் காண முடியாது என்பதை உணர்ந்துகொள்ளவே 2-3 நாட்கள் தேவைப்பட்டது. நான் மட்டுமல்ல அனைவருமே அவ்வாறு தான் உணர்ந்தோம்" என்று கூறியுள்ளார்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி அடுத்த ஆண்டும் விளையாடுவாரா என்று கேட்டபோது "அவர் என்ன முடிவெடுப்பார் என்பது எப்போதுமே யாருக்கும் தெரியாது" என்று தெரிவித்துள்ளார் ருத்துராஜ் கைக்கவாட்.
தோனி ஓய்வை அறிவித்த அதே ஆகஸ்ட் 15ம் தேதி, தோனி அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரங்களிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.