Swimming olympian sajan prakash: ‛அவனுக்கு ஒரு நிரந்தர முகவரி தேவை....’ -சஜன் பிரகாஷ் தாய்
சஜன், என்எல்சியின் விளையாட்டு மைதானத்தில் தான் நீச்சல் பயிற்சியை பெற்றதாக தாய் சாந்திமால் கூறுகிறார்
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் நீச்சல் போட்டியில், ‘ஏ’ தகுதி நிர்ணய நேரத்தின் படி தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தவர் சஜன் பிரகாஷ்.
சஜன் ஒற்றை பெற்றோரால் வளர்க்கப்பட்டவர்.அவர், ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதே தந்தை இறந்துவிட்டார். அவரின் தாய் சாந்திமால் (Shantymol) ஒரு விளையாட்டு வீரர். 1987 உலக ஜூனியர்ஸ் மற்றும் ஆசிய ஜூனியர்ஸில் 100 மீ, 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டவர். தந்தையின் மறைவுக்குப் பிறகு, சஜனுக்கு மிகச்சிறந்த குழந்தைப் பருவம் கிடைத்திட வேண்டும் என்பதை வைராக்கியமாக கொண்டவர். முன்னதாக, பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், " கல்யாண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவரின் குடிபோதை பழக்கத்தால், தினசரி வன்முறையை எதிர்கொண்டு வந்தேன். தனியாக வாழ்வதால் எந்தப் பிரச்னையும் இல்லை”என்று தெரிவித்திருந்தார்.
18வயது முடிவுற்ற நிலையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி என்எல்சி நிறுவனத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் சாந்திமால் பணியமர்த்தப்பட்டார். சஜன், என்எல்சியின் விளையாட்டு மைதானத்தில் தான் நீச்சல் பயிற்சியை பெற்றதாக சாந்திமால் கூறுகிறார்.
தொடர்ந்து நீச்சல் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெறத் தொடங்கினார். 2015இல் கேரளத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் கட்டற்ற பாணி, வண்ணாத்திப் பாணி, தொடர்நீச்சற் போட்டிகளில் பங்கேற்றார். பிப்ரவரி 8, 2015இல் 6 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை படைத்து அந்தப் போட்டிகளின் சிறந்த மெய்வல்லுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஒலிம்பிக்கில் இவர் இந்தியா சார்பாக 200மீ வண்ணாத்திப் பாணி நீச்சற்போட்டியில் பங்கேற்றார்
இதன் காரணமாக, இந்திய இரயில்வேயில் பணி புரியும் வாய்ப்பும் கிடைத்தது.பெங்களூர் ரயில் நிலையத்தில் வந்திருங்கும் ஒவொவொரு ரயில் பெட்டிகளையும் பரிசோதனை செய்ய வேண்டும். இது, சஜனுக்கு மிகந்த சலிப்பையும், உடல் வலியையும் தந்ததாக அவரின் தாய் கூறுகிறார்.
தனது மகனுக்கு சிறப்பான வீடு கட்ட முடிவு செய்திருக்கிறார் சாந்திமால். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "2015ல் நெய்வேலியில் பெய்த கனமழை காரணமாக, விளையாட்டுத் துறையில் நான் பெற்ற சான்றிதழ்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மேல் அறையில் இருந்த சஜனின் சான்றிதழ் தப்பித்தது. இந்த சம்பவம் எனக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், 2018ல் கேரளாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பெற்ற தங்க மெடலை வீட்டிற்குள் வைக்க இடமில்லாததால், கேரளா விளையாட்டு ஆணையக் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த, நீச்சல் வீரருக்கு இன்னும் நிரந்தர முகவரி இல்லை" என்று கவலை அடைந்தார்.
பரதநாட்டியத்திலும் ஆர்வம் கொண்ட சஜன் பிரகாஷ், தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் திறந்த பல்கலைக்கழகத் திட்டத்தில் கணினி பயன்பாட்டில் இளங்கலைப் பட்டம் பெற்று முதுகலைப் பட்டப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.
மேலும், வாசிக்க:
Sajan prakash : இந்தியாவின் மைக்கேல் ஃபெல்ப்ஸ்.. யார் இந்த சஜன் பிரகாஷ்?