மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்; ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வளையப்பந்து, வாழ்வீச்சு, கேரம் போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட அளவிலான டென்னிகாயிட்( வளையப்பந்து) மற்றும் வால்வீச்சு போட்டிகள் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. குறுவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். 28 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியை பள்ளி நிர்வாக செயலாளர் பாஸ்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் காந்திமதி தொடங்கி வைத்தனர்.
வால் வீச்சு போட்டியில் மாணவர்கள் பரபரப்பாக மோதிக்கொண்டனர். இதேபோல் வளையப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கன்னியாகுமரியில் நடைபெறும் வாள்வீச்சு போட்டியிலும் காஞ்சிபுரத்தில் நடைபெறும் வளையப்பந்து போட்டியிலும் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள்- 128 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.
மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. மயிலாடுதுறை ராஜ் மெட்ரிக் தனியார் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் மற்றும் சீர்காழி வட்டங்களில் ஏற்கனவே நடைபெற்ற குறுவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30 பள்ளிகளை சேர்ந்த 128 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். மாவட்ட விளையாட்டு அலுவலர் காந்திமதி முன்னிலையில் நடைபெற்ற போட்டிகளை பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன் தொடக்கி வைத்தார். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
சீர்காழியில் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு- வெற்றி பெற்ற போட்டியாளர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி அளவிலான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இப்போட்டியை சபாநாயகமுதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் உள்ள 10, பள்ளிகளை சேர்ந்த 60 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டி வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. போட்டியானது, சீர்காழி முதல் மாதானம் வரை தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டிகளில் முதல் இடம் பெற்றும் வெற்றியாளர் அரியலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 19 -ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான சாலையோர மிதிவண்டி போட்டியில் பங்கேற்க உள்ளார்.