திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
பணம் பெற்றுக் கொண்டு மன்னார்குடிக்கு பஸ்சில் ஏறியதை நோட்டமிட்டு கோபியும் பஸ்சில் ஏறி போலீஸ் என்று கூறி மிரட்டி பஸ்சை விட்டு இறக்கியுள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே அடகுகடை பங்குதாரரின் தம்பியை மிரட்டி ரூ.44.59 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த தில்லாலங்கடி வேலைக்கு பின்னணியில் அந்த அடகு கடையில் பணியாற்றிய வாலிபரே கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கார்த்திக் (36). இவர் தனது நண்பர் ரமேசுடன் சேர்ந்து மன்னார்குடி பெரிய கம்மாளர் தெருவில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கூத்தாநல்லூர் வெள்ளக்குடி காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரதீபன் (23) வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாலை அடகுகடை பங்குதாரர் ரமேஷ் தனது தம்பி அர்ஜுன் மற்றும் பிரதீபன் ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு தஞ்சைக்கு வந்தார்.
பின்னர் அர்ஜுன், பிரதீபன் இருவரும் தஞ்சை அய்யங்கடை தெருவில் உள்ள நகைக்கடைக்கு சென்றனர். ஏற்கனவே அங்கு நகைகள் கொடுத்ததற்கான பணம் ரூ.44 லட்சத்து 59 ஆயிரத்தை வாங்கி கொண்டனர். அந்த பணத்தை ஒரு பேக்கில் வைத்து கொண்டு ஊருக்கு புறப்பட்டனர். அவர்களை தஞ்சாவூர் நகைக்கடையில் இருந்தவர் தனது பைக்கில் அழைத்து வந்து ரெயில்வே கீழ்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டார்.
பின்னர் அர்ஜூன், பிரதீபன் இருவரும் மன்னார்குடிக்கு ஒரு தனியார் பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தனர். வாண்டையார் இருப்பு பஸ் நிறுத்தம் அதே பஸ்சில் பயணம் செய்த மர்மநபர் ஒருவர் அர்ஜூன், பிரதீபனிடம் வந்து நான் குற்றப்பிரிவு போலீஸ். உங்களை விசாரிக்க வேண்டும். பஸ்சில் இருந்து கீழே இறங்குங்கள் என்று கூறி மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன இருவரும் பஸ்சில் இருந்து அந்த மர்மநபருடன் கீழே இறங்கி நின்றுள்ளனர்.
அந்த மர்மநபர் இரண்டு பேரின் செல்போனையும், பணம் வைத்திருந்த பேக்கையும் வாங்கியுள்ளார். அப்போது அங்கு மற்றொரு நபர் பைக்கில் வந்து நிற்க பணப்பையுடன் அந்த மர்மநபர் ஏறி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அர்ஜூன், பிரதீபன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர். பின்னர் இருவரும் மற்றொரு வேறொரு பஸ்சில் ஏறி மன்னார்குடிக்கு சென்று நடந்த விவரத்தை அடகுக்கடை உரிமையாளர் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் கார்த்திக். இருவரையும் அழைத்து வந்து தஞ்சாவூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வாண்டையார் பஸ் நிறுத்தம், தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் அர்ஜூன் மற்றும் பிரதீபனிடம் போலீசார் நடந்த சம்பவங்கள் பற்றி விசாரித்துள்ளனர். இதில் பிரதீபன் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உடன் போலீசார் பிரதீபனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அடிக்கடி தஞ்சாவூருக்கு சென்று பணம் வாங்கிக் கொண்டு வருவதை பிரதீபன் நோட்டம் விட்டுள்ளார். இதுகுறித்து தனது தாய்மாமா ரஞ்சித்திடம் தெரிவித்துள்ளார். அவர் தனது நண்பர் கோபி என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் 8ம் தேதி மாலை தஞ்சைக்கு செல்வது குறித்து பிரதீபன் தனது மாமா ரஞ்சித்திடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் பணம் பெற்றுக் கொண்டு மன்னார்குடிக்கு பஸ்சில் ஏறியதை நோட்டமிட்டு கோபியும் பஸ்சில் ஏறி போலீஸ் என்று கூறி மிரட்டி பஸ்சை விட்டு இறக்கியுள்ளார். பின்னர் பைக்கில் வந்த ரஞ்சித்துடன் பணத்தை பறித்து கொண்டு தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் ரஞ்சித், கோபி இருவரும் பணத்துடன் திருச்சிக்கு தப்பிச் செல்ல பாபநாசம் அருகே உடையார்கோவில் பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகன் ஹிட்டாச்சி குமார் என்கிற குமார் (39), சாலியமங்கலம் பகுதியை சேர்ந்த அப்துல்சலீம் என்பவரின் மகன் முகமது தௌபிக் (37), திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பூதமங்கலம் பகுதியை சேர்ந்த விஜயராஜா என்பவரின் மகள் ராசாத்தி (30) ஆகியோர் உதவி செய்துள்ளதும் தெரியவந்தது.
உடன் போலீசார் பிரதீபன், ஹிட்டாச்சி குமார், முகமது தௌபிக், ராசாத்தி ஆகிய நால்வரையும் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித், கோபியை தேடி வருகின்றனர்.





















