Virat Kohli: "கிரிக்கெட்டை கட்டியாண்டவருடா.." கோலியின் ஓய்வு முடிவுக்கு பேட்டிங் ஃபார்ம் காரணமா? டேட்டா இதுதான்
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததற்கு அவரது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் ஃபார்ம் காரணம் என்று கூறும் நிலையில் புள்ளிவிவரங்களை கீழே காணலாம்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் கடவுளாக எப்படி பார்க்கப்படுகிறாரோ? அதேபோல கிரிக்கெட்டின் அரசனாக போற்றப்படுபவர் விராட் கோலி. ரன்மெஷின், சேசிங் மன்னன், கிங் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விராட் கோலி ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்டுக்கு விராட் கோலி குட்பை?
இது விராட் கோலியின் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடினார். இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி சிறப்பாக ஆடவில்லை. இந்திய அணியும் 3-0 என்று தொடரை இழந்தது. கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் மட்டும் சதம் விளாசிய விராட் கோலி அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பினார். இந்திய அணியும் தொடரை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி செல்லும் வாய்ப்பையும் இழந்தது.
விராட் கோலியின் சமீபகால டெஸ்ட் பேட்டிங் சற்று இறக்கமாகவே உள்ளது என்றே கூற வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கொரோனாவிற்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.
கடந்த 7 ஆண்டுகள்:
2019ம் ஆண்டு - 8 டெஸ்ட் போட்டிகள் - 612 ரன்கள் - 2 சதங்கள்
2020ம் ஆண்டு - 3 டெஸ்ட் போட்டிகள் - 116 ரன்கள் - சதம் இல்லை
2021ம் ஆண்டு - 11 டெஸ்ட் போட்டிகள் -536 ரன்கள் - சதம் இல்லை
2022ம் ஆண்டு - 6 டெஸ்ட் போட்டிகள் - 265 ரன்கள் - சதம் இல்லை
2023ம் ஆண்டு - 8 டெஸ்ட் போட்டிகள் - 671 ரன்கள் - 2 சதங்கள்
2024ம் ஆண்டு - 10 டெஸ்ட் போட்டிகள் - 417 ரன்கள் - 1 சதம்
2025ம் ஆண்டு - 1 டெஸ்ட் போட்டி - 23 ரன்கள் - சதம் இல்லை
கடந்த 7 ஆண்டுகளில் விராட் கோலியின் செயல்பாடு அதற்கு முந்தைய ஆண்டுகளில் இருந்தது போல இல்லை என்பது புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜா:
கடந்த 2011ம் ஆண்டு முதல் முதன்முதலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி வருகிறார். 2018ம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டை கட்டியாண்டார் என்றே சொல்லலாம். குறிப்பாக, 2016, 2017, 2018 ஆகிய 3 ஆண்டுகளில் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தினார்.
2011ம் ஆண்டு - 5 டெஸ்ட் - 202 ரன்கள் - சதம் இல்லை
2012ம் ஆண்டு - 9 டெஸ்ட் - 689 ரன்கள் - 3 சதங்கள்
2013ம் ஆண்டு - 8 டெஸ்ட் - 616 ரன்கள் - 2 சதங்கள்
2014ம் ஆண்டு - 10 டெஸ்ட் - 847 ரன்கள் - 4 சதங்கள்
2015ம் ஆண்டு - 9 டெஸ்ட் - 640 ரன்கள் - 2 சதங்கள்
2016ம் ஆண்டு - 12 டெஸ்ட் -1215 ரன்கள் - 4 சதங்கள்
2017ம் ஆண்டு -10 டெஸ்ட் - 1059 ரன்கள் - 5 சதங்கள்
2018ம் ஆண்டு -13 டெஸ்ட் - 1322 ரன்கள் - 5 சதங்கள்
2016, 17 மற்று் 2019 ஆகிய 3 வருடங்களில் மட்டும் விராட் கோலி 7 இரட்டை சதங்களை விளாசினார்.
காரணம் என்ன?
கொரோனா பேரிடருக்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களை எடுத்து வந்தாலும் அவர் சதம் விளாசுவது சற்று கடினமானதாகவே மாறி வருகிறது. இதுபோன்ற காரணங்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரும் நோக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விராட் கோலி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விராட் கோலி 2027ம் ஆண்டு உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தும் வகையிலும் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.




















