Mayank Yadav: இளம் புயல் மயங்க் யாதவ் ஐ.பி.எல். தொடரில் தற்காலிக விலகல் - என்னாச்சு? சமாளிக்குமா லக்னோ?
லக்னோ அணிக்காக சிறப்பாக பந்து வீசி வரும் மயங்க் யாதவ் ஐ.பி.எல். தொடரின் அடுத்த சில போட்டிகளில் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் இளம் வீரர்கள் தங்களது பங்களிப்பை அசத்தி வருகின்றனர். அந்த வகையில் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 22 போட்டிகளே நடைபெற்றாலும், அதில் சில வீரர்களின் ஆட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த வீரர்களின் பட்டியலில் முதன்மையாக இருப்பவ் மயங்க் யாதவ்.
மயங்க் யாதவ் விலகல்:
லக்னோ அணிக்காக ஆடி வரும் இவரது வேகப்பந்து வீச்சு, எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக தான் களமிறங்கிய முதல் போட்டியிலே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதற்கு அடுத்த போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராகவும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். குறிப்பாக, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 156.7 கி.மீ. வேகத்தில் இவர் பந்துவீசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிலையில், இவருக்கு தற்போது அடிவயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் ஒரு வார காலத்திற்கு லக்னோ அணிக்காக ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது அடிவயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த வாரம் அவருக்கு லக்னோ அணி நிர்வாகம் ஓய்வு அளித்துள்ளது. விரைவில் அவர் களத்திற்கு திரும்புவார் என்றும் அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கட்டுக்கோப்பான பந்துவீச்சு:
டெல்லியைப் பூர்வீகமாக கொண்ட லக்னோ வீரரான மயங்க் யாதவ் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். வழக்கமாக வேகப்பந்துவீச்சாளர்கள் வேகமாக வீசும்போது அவர்கள் பந்தை லென்த்தில் வீச சிரமப்படுவார்கள். ஆனால், 21 வயதான மயங்க் யாதவ் சிறப்பாகவே பந்துவீசுகிறார்.
அவர் 150 முதல் 155 கி.மீ. வேகத்தில் பந்துவீசினாலும் அவரால் பந்தை கட்டுக்கோப்பாக வீச முடிகிறது. இவரது நேர்த்தியான வேகப்பந்துவீச்சால் அவர் விரைவில் இந்திய அணியின் பந்துவீச்சு பட்டாளத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு உலகக்கோப்பை டி20 நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் மயங்க் யாதவ்விற்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
என்ன செய்யப்போகிறது லக்னோ?
இதுவரை 3 ஐ.பி.எல். போட்டிகள் மட்டுமே ஆடியுள்ள மயங்க் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மயங்க் யாதவ் இல்லாத காரணத்தால் அடுத்த ஓரிரு போட்டிகளில் பந்துவீச்சில் என்ன செய்யப்போகிறது லக்னோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், தமிக வீரர் மணிமாறன் சித்தார்த், நவீன் உல் ஹக், யஷ் தாக்கூர், பிஷ்னோய், குருணல் பாண்ட்யா மிகப்பெரிய பலமாக உள்ளனர்.
மேலும் படிக்க: Watch Video: "அந்த சத்தம்" களத்துக்கு வந்த தோனி! அரண்டு போன ரஸல் - நீங்களே பாருங்க!
மேலும் படிக்க: Yash thakur: 2024 ஐபிஎல் தொடரின் பந்து வீச்சில் யஷ் தாகூர் படைத்த அடடா சாதனை!