IPL 2023: பாதியை கடந்த ஐ.பி.எல்...! இன்னும் வெடிக்காத வெறுங்குண்டுகள்…! சொதப்பும் 'கோடீஸ்வர' பேட்ஸ்மேன்கள்..!
தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸல் போன்ற ஃபினிஷர்கள் சொதப்பி வரும் நிலையில் ப்ரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், மயங்க் அகர்வால் போன்ற வீரர்களும் பேட்டிங்கில் பெரும் பங்களிப்பை அளிக்கவில்லை.
10 அணிகளும், ஏழு ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ளதால், 2023 ஐபிஎல் லீக் கட்டத்தின் முதல் பாதி முடிவடைந்துள்ளது. இந்த முதல் பாதி பல சுவாரஸ்யமான போட்டிகளையும், சில வீரர்களின் அற்புதமான இன்னிங்ஸ்களையும், சிலரது அபரிமிதமான ஃபார்மையும் காட்டியுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள் இதுவரை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாததும், எதிர்பாராத பலர் புயலாக சீறியதும் நடந்து வருகிறது.
வெடிக்காத வெறுங்குண்டுகள்:
அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், சாய் சுதர்சன், வெங்கடேஷ் ஐயர், ஷிகர் தவான் போன்ற வீரர்கள் நன்றாக ஆடி பலரை ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் நிலையாக ரன் எடுப்பவர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இருப்பினும், பல வெடிகுண்டுகள் இவ்வளவு நேரமாக அக்னிகுண்டத்தில் இருந்தும் இன்னும் வெடிக்காமல் இருக்கின்றன.
ஏற்கனவே பலமுறை வெற்றி நாயகனாக திகழ்ந்த இவர்கள், தங்கள் செயல்திறன்களை நிரூபித்த இவர்கள் மீது அணிகள் பெரும் நம்பிக்கையை வைத்துள்ளனர். மேலும் இதில் சிலர் பெரும் பணத்திற்கு ஏலம் சென்றனர். ஆனால், இதுவரை அவர்கள் ஒரு போட்டியில் கூட அணியின் வெற்றிக்கு தேவையான விஷயங்களை செய்யவில்லை. அப்படியான வீரர்களில் முன்னணியின் இருப்பவர்கள் இங்கே:
தினேஷ் கார்த்திக் (RCB)
37 வயதான மூத்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன், 2022 இல் RCB க்கு முக்கியமான மேட்ச்களை தனது அதிரடி மூலம் முடித்துக் கொடுத்து, இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை வரை இடம்பிடித்தார். கடந்த ஐபிஎல்-இல் சராசரியாக 55.00 மற்றும் 183.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 330 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டும், ஃபினிஷராக அவர் நியமிக்கப்பட்ட நிலையில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடவில்லை.
ஏழு ஆட்டங்களில் ஐந்து ஒற்றை இலக்க ஸ்கோர்கள், இரண்டு டக் உட்பட, அவர் மொத்தம் 61 ரன்கள் எடுத்துள்ளார். கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் சுமையை குறைக்க இவர் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறுகின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.
ஆண்ட்ரே ரஸ்ஸல் (கேகேஆர்)
ஜமைக்கா பீரங்கி இன்னமும் சுடாமல், ஒரு ஓரமாக தூசி படிந்து காணப்படுகிறது. கொல்கத்தா அணி மிகவும் அதிக விலை கொடுத்து தக்க வைத்துள்ள வீரரான இவருக்காக அணி ₹16 கோடி கொடுத்துள்ளது. முந்தைய காலங்களில் ரஸல் இருந்தாலே எப்பேர்ப்பட்ட இலக்கும் அசால்ட்டாக பார்க்கப்படும். அப்படி பேட்டை எடுத்து சுழற்றினாலே சிக்ஸர் மழை பொழியும். ஆனால் இம்முறை கதையே வேறு.
அவர் ஆரம்பத்தில் இரண்டு ஆட்டங்களில், 21* மற்றும் 38* ரன்களை முறையே MI மற்றும் DC க்கு எதிராக எடுத்தார். மற்ற நான்கு இன்னிங்ஸ்களிலும் அவர் ஒற்றை இலக்க ஸ்கோரை எடுத்தார். அவரிடம் இருந்து நல்ல இன்னிங்ஸ் வரவில்லை என்பதோடு, கேகேஆர் பல ஆட்டங்களில் தோல்வியையும் சந்தித்து 8வது இடத்தில் உள்ளது.
ப்ரித்வி ஷா (டிசி)
ஆறு இன்னிங்ஸில் இரண்டு டக்களுடன் மொத்தம் 47 ரன்கள் மட்டுமே குவித்துள்ள 23 வயதான தொடக்க ஆட்டக்காரருக்கு இது மறக்க முடியாத சீசனாக உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளுடன் இந்த ஐபிஎல்-ஐ தொடங்கியது. மேலும் ப்ரித்வி ஷாவின் ஃபார்ம் ஒரு பெரிய கவலையாகவே இருந்தது.
அதனால் அவர் கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் வென்ற SRH போட்டியில் களமிறக்கவே படவில்லை. கேப்டன் டேவிட் வார்னர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ப்ரித்வி ஷா-வும் அதை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எல்லா ஆட்டங்களிலும் சொற்ப ரன்களுக்கு வெளியேறி அணி வைத்திருந்த நம்பிக்கையை இழந்தார். தற்போது சால்ட் தொடக்க ஆட்டக்காரராக இறங்குகிறார், ப்ரித்வி ஷா மீண்டும் வர வாய்புள்ளதா? என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.
மிட்செல் மார்ஷ் (டிசி)
இந்த சீசனில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஆடாத டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மற்றொரு முக்கிய வீரர். 2021 டி 20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றபோது, இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக இருந்த 31 வயதான அவர், தனது திருமணத்திற்காக வீட்டிற்குச் சென்றபோது இரண்டு ஆரம்ப ஆட்டங்களைத் தவறவிட்டார். ஆனால் அவர் விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு டக் களுடன் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பந்து வீச்சில், அவர் 9.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினாரே தவிர பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய அணிக்காக சமீப காலங்களில் அற்புதமாக செயல்பட்ட அவரிடம் இருந்து பெரிய ஆட்டத்தை எதிர்பார்த்திருந்தது ஐபிஎல் உலகு. இவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ₹6.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. இனி பிளேஆஃப்களுக்குச் செல்வது மிகவும் கடினம் என்றாலும், அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்பி வருவார் என நம்பப்படுகிறது.
மயங்க் அகர்வால் (SRH)
120 போட்டிகளில் விளையாடிய ஐபிஎல் மூத்த வீரர் சன்ரைசர்சால் ₹8.25 கோடிக்கு வாங்கப்பட்டார். கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 12 இன்னிங்ஸ்களில் வெறும் 196 ரன்கள் எடுத்திருந்த போதிலும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாங்கியது சன்ரைசர்ஸ் அணி. ஆனால் 2016 இல் கோப்பையை வென்ற அணிகாக சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஏழு இன்னிங்ஸ்களில், அவர் மூன்று ஒற்றை இலக்க ஸ்கோருடன் 164 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். MI க்கு எதிராக 48 மற்றும் DC க்கு எதிராக 49 ரன் எடுத்திருந்தாலும் அது ஆட்டத்தை வெல்ல உதவவில்லை.