IPL 2021 : ஹைதராபாத் அணியில் இணைந்த மற்றுமொரு சேலத்து புயல்...! வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக பெரியசாமி...!
சேலத்தைச் சேர்ந்த கணேசன் பெரியசாமி ஐ.பி.எல். தொடரில் ஆடும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. இதனால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஐ.பி.எல். போட்டிகளில் ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ஷாரூக்கான், வருண் சக்கரவர்த்தி, ஜெகதீசன் ஆகியோர் ஆடி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மற்றுமொரு வீரர் ஐ.பி.எல். தொடரில் ஆட உள்ளார். தமிழ்நாடு பிரமியர் லீக்கில் சிறப்பாக ஆடி வந்த கணேசன் பெரியசாமிதான் ஐ.பி.எல். போட்டித் தொடருக்கு தேர்வாகி உள்ளார். ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்வாகியுள்ளார்.
ஐ.பி.எல், தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற ஹைதரபாத் அணியுடன் பெரியசாமியும் சென்றுள்ளார். தற்போது, துபாயில் உள்ள ஹைதராபாத் அணியுடன் பெரியசாமியும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே, ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஆடி வருகிறார். மிகவும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து இந்திய அணியில் நடராஜனும், சன்ரைசர்ஸ் அணியில் சிறப்பாக ஆடியதன் மூலமாகவே இந்திய அணிக்குள் நுழைந்தார்.
27 வயதான கணேசன் பெரியசாமி இதுவரை தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காகவும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார். பந்துவீச்சில் மலிங்காவின் பாணியை கடைபிடிப்பதால், பெரியசாமியை ஸ்லிங்கா பெரியசாமி என்றும் செல்லமாக சகவீரர்களும், ரசிகர்களும் அழைக்கின்றனர். நான்காவது டி.என்.பி.எல். தொடரில் தான் ஆடிய அனைத்து போட்டிகளிலுமே கணேசன் பெரியசாமி விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வேறு எந்த வீரரும் இதுவரை அந்த சாதனையை செய்தது கிடையாது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தேர்வாகியுள்ள கணேசன் பெரியசாமி சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் பிறந்தவர். 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பெரியசாமி தனது அயராத உழைப்பாலும், கிரிக்கெட் திறனாலும் இன்று ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு வலைப்பந்துவீச்சு பயிற்சியாளராக தேர்வாகியிருப்பது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சேலத்தில் இருந்து ஐ.பி.எல். தொடரில் தமிழக வீரர் நடராஜன் கலக்கி வரும் நிலையில், தற்போது இன்னொரு சேலம் வீரரான பெரியசாமியும் இணைந்திருப்பது சேலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் பயிற்சி பெறும் அகாடமியில்தான் பெரியசாமியும் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் அணியில் இணைந்துள்ள பெரியசாமிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
INDIAN CRICKET COACH : மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுகிறாரா அனில் கும்ப்ளே?