INDIAN CRICKET COACH : மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுகிறாரா அனில் கும்ப்ளே?
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு அனில் கும்ப்ளேவிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருபவர் ரவிசாஸ்திரி. அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டீங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரது பயிற்சிகாலமும் நிறைவடைய உள்ளது.
இதனால், இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் பொறுப்பு ஏற்குமாறு அனில் கும்ப்ளேவிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனில் கும்ப்ளே ஏற்கனவே கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பு வகித்தார். ஓராண்டு காலம் மட்டுமே இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்த கும்ப்ளேவிற்கு, கேப்டன் விராட் கோலிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் அப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அணியின் பயிற்சியாளராக 2017-ஆம் ஆண்டு ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார்.
இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி ஓரிரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த சூழலில், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளேவை மீண்டும் தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனில் கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி 2017ம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் கோப்பையை பறிகொடுத்தது. தற்போது, அனில் கும்ப்ளே ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டால் அவர் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்ய நேரிடும்.
உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த அனில்கும்ப்ளே இந்திய அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தவர். கும்ப்ளே இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் ஆடி 337 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். போட்டிகளில் 45 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையும் அனில் கும்ப்ளேவிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அனில் கும்ப்ளேவை அணுகுவதற்கு முன்பாக, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிலா ஜெயவர்த்தனேவிடமும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக தற்போது ஜெயவர்த்தனே பொறுப்பு வகித்து வருகிறார்.
ஆனால், ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை கவனித்து வருவதுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியையும் சேர்த்து வகிக்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. பி.சி.சி.ஐ.யின் புதிய விதிப்படி ஒருவர் இரு பதவியை வகிப்பது என்பது ஏற்கப்படாது.