IPL 2021: ஐ.பி.எல்., போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி: தொடங்கியது பேச்சுவார்த்தை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 8 அணிகள் மோதும் இந்த போட்டியில் தோனி, விராட்கோலி, ரோகித் சர்மா, ஷிகர்தவான் என இந்தியாவின் முன்னணி வீரர்களுடன், உலகின் தலைசிறந்த வீரர்களும் ஆடுவதால் இந்த போட்டித் தொடருக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக பாதியிலே நிறுத்தப்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டித் தொடரில் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று மைதானங்களில் மட்டும் நடத்தப்பட உள்ள ஐ.பி.எல். போட்டிகளில் சுமார் 60 சதவீதம் வரையிலான ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மொத்தம் 31 ஆட்டங்களையும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு முன்பு இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள் கடந்த 9-ந் தேதி தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் நாட்டின் கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் தாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்தது. ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்ட இந்த ஐ.பி.எல். தொடரில் ஆடிய அமித்மிஸ்ரா, சந்தீப்வாரியர், வருண் சக்ரவர்த்தி, விருத்திமான் சஹா, மைக்கேல் ஹசி மற்றும் லட்சுமிபதி பாலாஜி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் போட்டித்தொடர் பாதியிலே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட உள்ள ஐ.பி.எல். போட்டித் தொடரின் எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த போட்டி அக்டோபர் 15-ந் தேதி நிறைவு பெற உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த தொடரில் பங்கேற்பதற்காக முதலில் சென்னை மற்றும் மும்பை அணிகள் துபாய் செல்ல உள்ளனர். தோனி ஏற்கனவே துபாயில்தான் உள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் இருப்பதால், அங்கு நடைபெறும் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டால், இந்தியாவைப் போலவே மைதானம் நிரம்பி வழியும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் அனுமதியை பொறுத்து தான் ரசிகர்களின் உற்சாகம் முடிவுக்கு வரும் என்பதால் அதுவரை காத்திருக்க வேண்டியுள்ளது.





















