இந்திய பேட்ஸ்மேன்களும் லார்ட்ஸ் மைதானமும் - சோகமான தொடர்கதை !
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 12ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. அதில் ஐந்தாவது நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறவில்லை. இதனால் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தச் சூழலில் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மென்களின் செயல்பாடுகள் என்னென்ன?
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் அதிகம் பாதிக்கப்படுவது பேட்ஸ்மேன்கள் சொதப்பும் போது தான். இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள சற்று சிரமப்பட்டு வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் கூட இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 97 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி அடுத்த 4 விக்கெட்களை 50 ரன்களுக்குள் இழந்து 145 ரன்களுக்கு 5 என திணறியது. அப்போது ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். அப்படி அவர் அரைசதம் கடக்கவில்லை என்றால் இந்திய அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இருக்க நேரிட்டிருக்கும்.
எனவே இந்தத் தொடரில் இந்திய அணி அதிகம் கவனம் செலுத்த வேண்டிய இடம் அவர்களின் பேட்டிங் என்பது தெளிவாக தெரிகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் தலைவலியாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த மைதானத்தில் மிகவும் குறைவான சராசரியையே வைத்துள்ளனர். அவர்கள் இதுவரை அங்கு ஒரு போட்டியில் ஆடியிருந்தாலும் அதில் இரண்டு இன்னிங்ஸிலும் அவர்கள் மோசமாகவே பேட்டிங் செய்துள்ளனர்.
இந்திய பேட்ஸ்மேன்கள் லார்ட்ஸ் மைதானத்தில்:
பேட்ஸ்மேன்கள் | போட்டிகள் | ரன்கள் | சராசரி |
விராட் கோலி | 2 | 65 | 16.25 |
புஜாரா | 2 | 89 | 22.25 |
ராகுல் | 1 | 18 | 9.00 |
ரஹானே | 2 | 139 | 34.75 |
அஸ்வின் | 1 | 62 | 62.00 |
ஜடேஜா | 1 | 71 | 35.50 |
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டு போட்டிகளில் விளையாடி வெறும் 65 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இங்கு இவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்த மைதானத்தில் இந்திய சார்பில் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளது ரஹானே தான் அவர் 2 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ஒரு போட்டியில் விளையாடி நல்ல சராசரியை வைத்துள்ளனர்.
லார்ட்ஸ் மைதானத்தில் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் இன்னும் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. பந்துவீச்சை பொருத்தவரை லார்ட்ஸ் மைதானத்தில் தற்போது அணியில் உள்ள இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 12 எடுத்துள்ளார். முகமது ஷமி 2 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சு சமீப காலங்களாக நல்ல ஃபார்மில் தான் உள்ளது. ஆகவே அதை குறித்து நாம் பெரிதும் கவலைப்பட தேவையில்லை. நம்முடைய பெரிய கவலை பேட்டிங் தான். ஏற்கெனவே அவர்கள் மோசமான பேட்டிங் ஃபார்மில் உள்ளனர். அத்துடன் லார்ட்ஸ் மைதானம் அவர்களுக்கு நல்ல மைதானமாக அமையவில்லை. 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் விராட் கோலி அனைத்து மைதானங்களிலும் ரன் அடித்திருந்தாலும் லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் திணறினார். இம்முறை அது போன்று இல்லாமல் நன்றாக அவர் விளையாட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
மேலும் படிக்க:நெருங்கும் ஐபிஎல்.. சென்னை வந்த தோனி..!