Satwiksairaj Tribute: "அவரோட மூத்த மகனைப்போல” : பேட்மிண்டன் வீரர் சத்விக் சாய்ராஜின் உருக்கமான பதிவு !
இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சிராக் செட்டி-சத்விக் சாய்ராஜ் ஜோடி இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல வீரர்கள் தொடரின் பாதியில் விலகினர். எனினும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சிறப்பாக விளையாடிய லக்ஷ்யா சென் உலக சாம்பியன் வீரரை போராடி வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக்சாய்ராஜ் ரன்கிரெட்டி மற்றும் சிராஜ் செட்டி ஆகிய இருவரும் இந்தோனேஷிய ஜோடியை 21-16,26-24 என்ற கணக்கில் வீழ்த்தியது. அத்துடன் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
இந்நிலையில் இந்த சாம்பியன் பட்டத்தை தன்னுடைய நண்பரின் தந்தைக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று சத்விக் சாய்ராஜ் ஒரு நெகிழ்ச்சியான பதிவை செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “என்னுடைய இந்த வெற்றியை நான் இறந்து போன கங்காதர் மாமாவிற்கு சமர்ப்பணம் செய்கிறேன். ஏனென்றால் என்னை எப்போதும் ஊக்குவித்து அவருடைய மூத்த மகனை போல் பார்த்து கொண்டார்.
மேலும் அவருடைய ஆசை ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பது தான்.நானும் அவருடைய மகன் கிருஷ்ணாவும் ஒன்றாக விளையாடவில்லை என்றாலும் நாங்கள் இருவரும் அவரை எப்போதும் பெருமைப்படுத்துவோம். அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
அவரின் இந்தப் பதவிற்கு பல இந்திய பேட்மிண்டன் வீரர்களும் பாராட்டி உள்ளனர். மேலும் இந்த நெகிழ்ச்சியான பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வெற்றியின் மூலம் சத்விக்-சிராக் இணை ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் தரவரிசையில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 10 ஆவது இடத்தில் இருந்த இந்த கூட்டணி இந்தியன் ஓபன் வெற்றிக்கு பிறகு இரண்டு இடங்கள் முன்னேறி 8ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
மேலும் படிக்க: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவிற்கு தண்ணி காட்டும் ஆஸி.. முதலிடத்தை இழந்த இந்தியா !