ICC Test Rankings:ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவிற்கு தண்ணி காட்டும் ஆஸி.. முதலிடத்தை இழந்த இந்தியா !
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதன்காரணமாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலி இடத்தில் இருந்த இந்திய அணி முதலிடத்தை இழந்ததுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது. இதனால் ஐசிசி தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலிய அணி பிடித்துள்ளது.
ஐசிசி சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி 119 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த தோல்வி காரணமாக முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததன் மூலம் நியூசிலாந்து அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. இந்திய டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 99 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
👊 4-0 #Ashes series winners
— ICC (@ICC) January 20, 2022
📊 Second on the #WTC23 table
🥇 Top-ranked Test team in the world!
Australia's rise to the summit of the MRF Tyres rankings 📈https://t.co/heNbOrq0km
அதேபோல் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சென் முதலிடத்தில் உள்ளார்.இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும், கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ரோகித் சர்மா ஒரு இடம்பின்னுக்கு தள்ளப்பட்டு 6ஆவது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் விராட் கோலி 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்திலும், பும்ரா 10ஆவது இடத்திலும் தொடர்ந்து வருகின்றனர்.
முன்னதாக இந்திய அணி 2021-ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது. அத்துடன் சர்வதேச டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் ஆண்டை நிறைவு செய்து அசத்தியது. இந்தச் சாதனையை தொடர்ச்சியாக இந்திய அணி 6 ஆவது ஆண்டாக நிகழ்த்தியிருந்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் ஆண்டின் இறுதியில் தொடர்ந்து முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொற்றுப்பு ஏற்றார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் அவர் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாட தொடங்கியது. அதன்பயனாக தரவரிசைப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது.
இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் ஆண்டின் இறுதியில் எந்த இடம்:
2016- நம்பர் 1
2017-நம்பர் 1
2018-நம்பர் 1
2019-நம்பர் 1
2020- நம்பர் 1
2021-நம்பர் 1
2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க தொடரில் அடைந்த இரண்டு டெஸ்ட் தோல்விகள் இந்திய அணிக்கு பெரிய அடியாக அமைந்துள்ளது. எனினும் அடுத்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:சோதனை முடிஞ்சிது.. இனி சாதனை தான்..! வெறித்தனமாக களமிறங்கும் கோலி.! ஆரம்பமே அசத்தல்தான்!!