செயலிழந்த ஃபிஃபா டிக்கெட் ஆப்… 3 மணிநேரம் வரை வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
பல ரசிகர்கள் குறைபாடுள்ள செயலியின் ஸ்கிரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர், சிக்கலைச் சரிசெய்யாமல் போனால் மைதானங்களுக்குள் நுழைய முடியாதோ என்று பலர் அச்சப்பட்டனர்.
ஃபிஃபாவின் ஆப் செயலிழந்ததால் நேற்றைய உலகக் கோப்பை போட்டியை காணவந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டியை காண பெரும் சிக்கலை சந்தித்தனர். நீண்ட நெடிய வரிசையில் 3 முதல் 4 மணிநேரம் காத்திருந்து காகித டிக்கெட்டுகள் பெற்றதாக தகவல்கள் வந்துள்ளன. பலரால் போட்டியை காண முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
செயலிழந்த செயலி
கத்தார் நேரப்படி நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற இங்கிலாந்து - ஈரான் போட்டியை காண வந்த ரசிகர்கள் கலீஃபா ஸ்டேடியத்திற்கு வெளியே நிற்கும் படங்கள் வெளியாகின. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அச்சிடப்பட்ட டிக்கெட்டுகளுக்காக வரிசையில் நின்றனர். அப்போது ஃபிஃபாவின் செய்தித் தொடர்பாளர், ஃபிஃபா செயலியில் உள்ள சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். காலை முதல் ரசிகர்கள் தங்கள் டிக்கெட்டுகள் மொபைல் செயலியில் இருந்து இருந்து மறைந்துவிட்டதாகக் கூறி வந்த நிலையில் அனைவரும் வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஆப்பை விட்டு வெளியேறிய எந்தவொரு பயனரும் மீண்டும் உள்நுழைய முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. பல ரசிகர்கள் குறைபாடுள்ள செயலியின் ஸ்கிரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர், சிக்கலைச் சரிசெய்யாமல் போனால் மைதானங்களுக்குள் நுழைய முடியாதோ என்று பலர் அச்சப்பட்டனர்.
வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்
போட்டி அமைப்பாளர்கள் பல நடவடிக்கைகள் எடுத்த போதும் ஆப்பை சரி செய்யாததால், பலர் வரிசையில் தண்ணீர் கூட இல்லாமல் காத்திருந்ததாக செய்திகள் வெளிவந்தன. செயலியில் சில பயனர்கள் உள்நுழைந்ததும், "உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புடைய டிக்கெட் எதுவும் இல்லை" என்ற செய்தி காண்பித்ததாக கூறினர். சிக்கலால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ரசிகர் ஒருவர் பேசுகையில், "சிலர் தங்களின் டிக்கெட்டுகளின் நகல்களைப் பெறுவதற்கு வரிசையில் தண்ணீர் இல்லாமல் நான்கு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது” என்றார்.
இங்கிலாந்தில் இருந்து பயணம் செய்து வந்தவர்கள்
உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் சிக்கலைக் கவனித்த அவர், "எங்கள் டிக்கெட்டுகள் முற்றிலும் காணாமல் போனதால் FIFA ஆப் அனைவரையும் கவலையடையச் செய்தது. நாங்கள் FIFA ஐ அழைக்க முயற்சித்தோம், ஆனால் தானியங்கி அமைப்பு எங்கள் அழைப்புகளை துண்டித்தது." என்றார்.
மேலும் நீண்ட வரிசையில் நின்ற ரசிகர்கள் நிகழ்ச்சி ஒருங்குனைப்பாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இங்கிலாந்தில் இருந்து சுமார் 3,000 ஆதரவாளர்கள் பயணம் செய்துள்ளதாகவும், வேல்ஸிலிருந்து இதேபோன்ற எண்ணிக்கையிலானோர் பயணம் செய்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. போட்டியை காணவந்த இவர்களில் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
My colleague @rhiachohan is outside the stadium and reporting that some England fans have waited two hours because of problems with the E-ticket system pic.twitter.com/0tCuAch80c
— Natalie Pirks (@Natpirks) November 21, 2022
இங்கிலாந்து வெற்றி
ஜூட் பெல்லிங்ஹாம், ரஹீம் ஸ்டெர்லிங், மார்கஸ் ராஷ்போர்ட் மற்றும் ஜாக் கிரேலிஷ் ஆகியோரின் கோல்களுடன்இங்கிலாந்து 6 கோல்கள் அடிக்க, ஈரானின் புக்காயோ சகாவின் இரண்டு கோல்களால் இங்கிலாந்து 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பல இங்கிலாந்து ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் ஏற்பட்ட விரக்தியைப் பற்றி பேசினர்.ரசிகர் ஒருவர், "விரக்தி என்னவென்றால், நாங்கள் இரண்டரை மணி நேரம் முன்னதாக மைதானத்திற்கு வந்துவிட்டோம். நாங்கள் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் £150 மற்றும் விமானங்களுக்கு £800 செலுத்தி உள்ளோம். இருப்பினும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவது மிகவும் வருந்தச்செய்கிறது.", என்றார்.