Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா
‘’அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டம்தான் பிரதமர், உள்துறை அமைச்சர் உட்படப் பல ஏழைத்தாயின் மகன்களும் அரசியல் அதிகாரத்தை அடையக் காரணம்’’ என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.
அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தில் அமைச்சர் அமித்ஷா சொன்ன கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர் அம்பேத்கர் பெயரை அடிக்கடி பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார் அமித்ஷா. ”அம்பேத்கர், அம்பேதகர், அம்பேத்கர் என சொல்வது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை சொல்லியிருந்தால் 7 பிறவியிலும் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கர் பெயரை இன்னும் 100 தடவை கூட சொல்லுங்கள். ஆனால் அம்பேத்கரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்” என சொன்னார். அம்பேத்கர் பெயரை 6 முறை சொல்லி நக்கல் செய்யும் உடல்மொழியில் அமித்ஷா பேசியதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுப்படைந்துள்ளனர்.
இந்தநிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வாசலிலேயே வைத்து அம்பேத்கர் புகைப்படங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதன் எதிரொலியாக எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பியதால் நாடாளுமன்றமும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
’’இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆட்சிக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'சும்மா அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொன்னால் சொர்க்கம் செல்ல முடியாது. அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது' என்று நாடாளுமன்றத்திலேயே பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அந்த அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டம்தான் பிரதமர், உள்துறை அமைச்சர் உட்படப் பல ஏழைத்தாயின் மகன்களும் அரசியல் அதிகாரத்தை அடையக் காரணம். அதுவே, இன்று அனைவரும் பரவலாக அரசியல் உரிமைகளைப் பெற வழிவகுத்தது. கடவுளின் பெயரைச் சொல்லி சொர்க்கம் செல்பவர்கள் செல்லட்டும்.ஆனால், புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்த சட்டத்தின் வழியில் சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று மக்களுக்கான அதிகாரத்தை வென்றறெடுக்கவும்,எல்லோருக்குமான அரசு, சமதர்ம சமூகத்தை உருவாக்கவும் அரசியல் அமைப்பு காட்டிய சட்ட வழியில் பயணிப்போம்.
எனவே நாங்கள் உரக்கச் சொல்கிறோம், வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர்!
என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.