முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
தமிழக அரசு அமைத்த தேடுதல் குழுவைத் திரும்பப் பெற்று, பல்கலைக்கழக மானியத் தலைவர் பரிந்துரைத்த நபரைக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத் துணை வேந்தர் நியமனத்துக்காக, தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட துணை வேந்தர் குழுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசு அமைத்த தேடுதல் குழுவைத் திரும்பப் பெற்று, பல்கலைக்கழக மானியத் தலைவர் பரிந்துரைத்த நபரைக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இந்தக் குழு முரணாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்துக்காகத் தேடுதல் குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவில், ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட நபர், தமிழ்நாடு அரசு பிரதிநிதி, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் மற்றும் யுஜிசி தலைவர் பிரதிநிதி ஆகியோர் இருந்தனர். குழுவின் தலைவராக ஆளுநரின் பிரதிநிதி இருப்பார். இதுகுறித்த அறிவிக்கையை ஆளுநர், அக்டோபர் 25ஆம் தேதி வெளியிட்டார்.
எனினும் யுஜிசி உறுப்பினரை ஏற்காத தமிழக அரசு, அவர் இல்லாமல், புதிய தேடுதல் குழுவை அமைத்தது. இதுகுறித்த அறிவிக்கையை உயர் கல்வித்துறை டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது. எனினும் இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
தேடுதல் குழுவைத் திரும்பப் பெறுக
மேலும், தமிழக அரசு அமைத்த தேடுதல் குழுவைத் திரும்பப் பெற்று, பல்கலைக்கழக மானியத் தலைவர் பரிந்துரைத்த நபரைக் குழுவில் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். தான் அமைத்துள்ள குழுவை அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தி உள்ளார்.
திமுக தலைமையிலான தமிழக அரசு- ஆளுநர் ரவி இடையே தொடர்ந்து வார்த்தைப் போர் முற்றி வரும் நிலையில், அடுத்ததாக தேடுதல் குழு விவகாரம் அமைந்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?