Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (மே 16) அறிவித்தார். இதையடுத்து விராட் கோலி போட்ட கமெண்ட் ட்ரெண்டாகி வருகிறது.
இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (மே 16) அறிவித்தார். இச்சூழலில் இவருக்கு வாழ்த்து கூறியுள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
ஓய்வை அறிவித்த சுனில் சேத்ரி:
இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் சுனில் சேத்ரி. முதன் முதலாக கடந்த 2002 ஆம் ஆண்டு மோகன் பாகன் அணிக்காக தன்னுடைய கால்பந்து வாழ்க்கையை தொடங்கியவர். தன்னுடைய அசாத்திய திறமையால் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்தார்.
அதோடு இந்திய அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். சர்வதேச கால்பந்து போட்டிகளை பொறுத்தவரை கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்து அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசம் தான் வைத்திருக்கிறார் சுனில் சேத்ரி.
வருகின்ற ஜூன் 6ம் தேதி இந்திய கால்பந்து அணி, குவைத்துக்கு எதிராக ஃபிபா உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்று போட்டியில் விளையாடுகிறது. இதுவே, சேத்ரியின் கடைசி போட்டியாக இருக்கும். இந்நிலையில் தான் 39 வயதான சுனில் சேத்ரி தன்னுடைய ஓய்வை இன்று அறிவித்தார்.
தனது ஓய்வு குறித்து எக்ஸ் பக்கத்தில் 9 நிமிட வீடியோவாக பேசிய சுனில் சேத்ரி, ” இந்த வீடியோவில் நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய நேரம் இது. நான் எனது முதல் போட்டியில் விளையாடியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
எனது முதல் போட்டி, எனது முதல் கோல், இது எனது பயணத்தின் மறக்க முடியாத தருணம், நாட்டிற்காக இவ்வளவு போட்டிகளில் விளையாடுவே என்று நான் நினைக்கவே இல்லை. நான் ஓய்வு பெற முடிவு செய்தபோது, முதலில் பெற்றோரிடமும், மனைவியிடமும் கூறினேன்.” என தெரிவித்தார்.
விராட் கோலியின் பதிவு:
இதையடுத்து சுனில் சேத்ரிக்கு இந்திய கால்பந்து கூட்டமைப்பு, பிசிசிஐ, ஃபிபா உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விரட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில், ‘சகோதரா உங்களை நினைத்து பெருமையடைகிறேன்’ என்று பதிவுசெய்துள்ளார்.
விராட் கோலியின் இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு ரசிகர்களும் சுனில் சேத்ரி கோல் அடித்த வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக ஆறு முறை AIFF ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். இது தவிர, 2011ல் அர்ஜூனா விருதும், 2019ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார் சுனில் சேத்ரி.
மேலும் படிக்க: Sunil Chhetri Retirement: அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
மேலும் படிக்க: IPL 2024 SRH vs GT: ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஹைதராபாத்? தடை போடுமா குஜராத்? நேருக்கு நேர் மோதல்