Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
சென்னையில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை தீவிரமாக பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியது முதலே மழை தீவிரமாக பெய்தது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் மழை தீவிரம் அடைந்தது. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஃபெஞ்சல் புயல் காரணமாக அடுத்தடுத்து தமிழ்நாட்டில் மழை கொட்டித் தீர்த்தது.
காலையிலே வெளுத்து வாங்கும் மழை:
ஃபெஞ்சல் புயல் காரணமாக மழை கொட்டித் தீர்த்த நிலையில். கடந்த சில நாட்களாகவே சென்னையில் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று மதிய வேளைக்கு பின்பு சென்னையில் மழை தீவிரம் அடைந்தது.
இரவு மழை இல்லாத நிலையில், இன்று காலை முதல் சென்னையில் மழை தீவிரம் அடைந்துள்ளது. அண்ணாசாலை, தேனாம்பேட்டை, கிண்டி, திநகர், பாரிமுனை, வடபழனி, கோடம்பாக்கம், கோயம்பேடு, அசோக்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.
வாகன ஓட்டிகள் அவதி:
காலையிலே சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருவதால் பணிக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மழை காரணமாக மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் காலை முதலே தீவிரமாக மழை பெய்து வரும் சூழலில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை மிதமான அளவில் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வாட்டி வதைக்கும் குளிர்:
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழும் ஏரிகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், சென்னைக்கு வரும் கோடை காலத்தில் போதுமான அளவு தண்ணீர் கைவசம் இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கடும் குளிர் வீசி வருகிறது. அதிகாலை மட்டுமின்றி மாலை நேரங்களிலும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் வழக்கத்தை விட அதிகளவு குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.