FIFA WORLDCUP 2022: வீணாய்ப்போன மெஸ்ஸியின் முதல் கோல்... உலகக்கோப்பையில் முதல் அப்செட் தோல்வி: அதிர்ச்சியில் அர்ஜெண்டினா!
2022ஆம் ஆண்டின் உலகக்கோப்பைத் தொடரில் தங்களது முதல் ஆட்டத்திலேயே சவுதி அரேபியா அணியிடம் அர்ஜெண்டினா அணி படுதோல்வி அடைந்தது.
2022 ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் தங்களது முதல் ஆட்டத்திலேயே சவுதி அரேபியா அணியிடம் அர்ஜெண்டினா அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது. முன்னாள் சாம்பியனான அர்ஜெண்டினாவை 2 - 1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தியுள்ளது.
இன்றைய ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் நட்சத்திரக் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கோல் அடித்த நிலையில், 1 -0 என்ற கணக்கில் ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.
ஆனால் அதன் பின் அர்ஜெண்டினா தடுமாறிய நிலையில், ஆட்டத்தின் 48, 54ஆவது நிமிடங்களில் சவுதி அரேபிய அணியின் அல்ஷெரி, அல்டவ் சராய் ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து அதிரடியாய் கோல் அடித்து சவுதி அரேபிய அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர். தொடர்ந்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியனான அர்ஜெண்டினாவை சவுதி அரேபியா வீழ்த்தியுள்ளது.
View this post on Instagram
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தார் நாடே கால்பந்து திருவிழாவில் மூழ்கிக்கொண்டுள்ளது. மொத்தம் 29 நாட்கள் நடக்கும் போட்டியின் மூன்றாவது நாளான இன்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெறுகிறது. சி மற்றும் டி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இன்று போட்டிகள் நடைபெறுகிறது.
சி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளுக்கும் இந்த உலகக் கோப்பையில் முதலாவது போட்டி இது தான். சர்வதேச தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவும், 51வது இடத்தில் சவுதி அரேபியாவும் உள்ளன. இதுவரை நேருக்கு நேர் இரு அணிகளும் 4 முறை சர்வதேச போட்டிகளில் களம் கண்டுள்ளன. இதில் 2 போட்டிகளில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
இச்சூழலில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி லுசயில் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அர்ஜெண்டினாவை வீழ்த்தி சவுதி அரேபியா வெற்றி வாகை சூடியுள்ளது.
இன்றைய போட்டிகள்
அடுத்ததாக மாலை 6.30 மணிக்குத் தொடங்கவுள்ள அடுத்த போட்டியில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் அணி துனிசியா அணியை எதிர்த்துப் போட்டியிடுகிறது.
இரவு 9.30 மணிக்குத் தொடங்கும் மூன்றாவது போட்டியில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ - போலந்து அணிகள் மோதுகின்றன.
நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கும் இன்றைய கடைசி ஆட்டத்தில் பிரான்ஸ் - ஆஸ்திரெலியா அணிகள் மோதுகின்றன.