Copa America 2024: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி - 16வது முறையாக பட்டம் வென்று மெஸ்ஸியின் அர்ஜெண்டினா சரித்திரம்
Copa America 2024: கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜெண்டினா அணி 16வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.
Copa America 2024: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின், இறுதி போட்டியில் 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கோபா அமெரிக்கா - அர்ஜெண்டினா சாம்பியன்:
அர்ஜெண்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதிய இறுதிப்போட்டிக்கு ஒதுக்கப்பட்ட, 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. அந்த வாய்ப்பின், 112வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்டின்ஸ் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் அர்ஜெண்டினா அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால், கொலம்பியா அணியால் இறுதிவரை கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால், நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
இதன் மூலம் கோபா அமெரிக்கா கோப்பையை அதிகமுறை வென்ற அணி என்ற உருகுவேவின் (15முறை) சாதனையை தகர்த்து, 16வது முறையாக அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
LAUTARO MARTÍNEZ: LA REDENCIÓN. pic.twitter.com/hLoJ9dDjxC
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 15, 2024
மூன்று ஆண்டுகளில் நான்கு முக்கிய கோப்பைகள்:
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கடந்த 3 ஆண்டுகளில் 4 பிரதான கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு அர்ஜென்டினா கோபா அமெரிக்கா கோப்பையை வென்றது. கடந்த 2022 ஃபைனலிசிமா போட்டியில், 2021ம் ஆண்டு ஐரோப்பா கோப்பை சாம்பியனான இத்தாலியை வென்றது. உச்சகட்டமாக கடந்த 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா வென்றது. இந்நிலையில் தான், நடப்பாண்டிற்கான கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை அர்ஜெண்டினா வென்று அசத்தியுள்ளது. இது மெஸ்ஸியின் கால்பந்தட்ட பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
மெஸ்ஸி தனிப்பட்ட முறையில் பல சாதனைகளை படைத்து விருதுகளை குவித்து இருந்தாலும், நாட்டிற்காக கோப்பைகளை வென்றது இல்லை என்ற விமர்சனம் நீண்டகாலமாக இருந்தது. ஆனால், அவரது கால்பந்தாட்ட வாழ்க்கையின் கடைசி காலத்தில் உள்ள மெஸ்ஸி, அடுத்தடுத்து உலகக் கோப்பை போன்ற பிரதான கோப்பைகளை வென்று தன் மீதான விமர்சனங்களை துடைத்து எறிந்துள்ளார்.