Champion Gukesh: உலக சாதனை: மத்திய அமைச்சர் அனுராக் தாகூரிடம் நேரில் வாழ்த்து பெற்ற தமிழக வீரர் குகேஷ்!
கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்ற குகேஷ் மற்றும் அவரது பெற்றோரை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்தினார்.
FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம் இன்று வாழ்த்து பெற்றார்.
கேண்டிடேட்ஸ் செஸ் டோர்ன்மெண்ட்:
கனடாவின் டொரொண்டோவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் டோர்ன்மெண்டில், தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது வீரரான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து இந்த பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் குகேஷ் படைத்தார். கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது இளம் வயது வீரர், இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வயது வீரர் என்ற சாதனைகளையும் குகேஷ் படைத்து செஸ் வரலாற்றில் தடம் பதித்திருந்தார். இந்த நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் குகேஷ். அப்போது குகேஷுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இமாச்சல பிரதேசத்தின் பாரம்பரிய தொப்பி, சால்வை மற்றும் நினைவு பரிசை வழங்கினார். அதேபோல், போட்டியின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை குகேஷ் அனுராக் தாகூரிடன் பகிர்ந்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்த்து:
இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று (மே3) வெளியிட்டுள்ளார். அதில், “இது ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு. குகேஷ் மற்றும் அவரது பெற்றோர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள எனது இல்லத்தில் சந்தித்தனர். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் பதிவான சாதனையை முறியடித்து, கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றதால், அவரது சிறந்த வெற்றிக்காக அவரையும் அவரது பெற்றோரையும் வாழ்த்தினேன். குகேஷின் பயணம் மற்றும் இந்திய சதுரங்கத்திற்கான பிரகாசமான எதிர்காலம் குறித்து நாங்கள் விவாதித்தபோது, உரையாடலில் பெருமை மற்றும் ஊக்கம் நிறைந்து இருந்தது. அவரது அர்ப்பணிப்பு மற்றும் திறமை உண்மையிலேயே பிரகாசித்தது, நாடு முழுவதும் உள்ள பல ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது. அவரது சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் அவரது எதிர்கால முயற்சிகளில் அவர் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறோம்” என்று கூறியுள்ளார்.
இளம் வயது சாதனைகள்:
கடந்த 2015ம் ஆண்டு 9 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான, ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றார். தொடர்ந்து, 2018ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்ட உலக இளம் விரர்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தனதாக்கினார்.
பல்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை குவித்த அவர், மார்ச் 2018-இல் 34 வது Cappelle-la-Grande Open இல் சர்வதேச மாஸ்டர் பட்டத்திற்கான புள்ளிகளை பெற்றார்.
கிராண்ட் மாஸ்டர் ஆன குகேஷ்:
12 வயது ஏழு மாதங்கள் 17 நாட்களில் இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார். அதன் மூலம் உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை வெறும் 17 நாட்களில் அவர் தவறவிட்டார். செஸ் ஒலிம்பியாடில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2700-க்கும் அதிகமான புள்ளிகளை பெற்றார். இதன் மூலம், செஸ் உலகில் இளம் வயதில் 2700 புள்ளிகளை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை குகேஸ் பெற்றார். அதோடு, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனயை, 2022ல் குகேஷ் படைத்தார்.
ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வகித்து வந்த நாட்டின் முதல் நிலை விரர் என்ற பட்டத்தை, 36 ஆண்டுகளுக்குப் பிறகு பறித்து குகேஷ் சரித்திரம் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.