WTC Final Pitch Report: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இறுதிப்போட்டி நடக்கும் ஓவல் மைதானம் எப்படி? வரலாறு சொல்வது என்ன? - ஓர் அலசல்
WTC Final Ind vs Aus: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்கும் ஓவல் மைதானம் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் நடந்த பழமை வாய்ந்த மைதானம் ஆகும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. சாம்பியன் மகுடத்தை சூடப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இந்த போட்டி நாளை மறுநாள் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தை போலவே, ஓவல் மைதானமும் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த போட்டியில் தாக்கத்தைச் செலுத்துவதற்காக இரு அணி வீரர்களும் அந்த நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பழமை வாய்ந்த ஓவல் மைதானம்:
ஓவல் மைதானத்தை பொறுத்தவரையில் டாஸ் வெல்ல வேண்டியது அவசியம். இந்த மைதானம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டு தரப்பினருக்கும் சாதகமானதாக இருக்கும். ஆனாலும், பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் அதே அளவிற்கு பந்துவீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் ஓவல் மைதானம் உள்ளது. இதனால், இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வெல்பவர்கள் ஆட்டத்தில் ஆதிக்கத்தை செலுத்தும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
கடைசி 2 நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகளவில் காணப்பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், முந்தைய 3 நாட்கள் ஆட்டம் காரணமாக மைதானம் வறண்டு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியிருக்கும். அப்போது, பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். இதனால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இந்த மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் குறைந்த அளவிலே காணப்பட்டுள்ளது.
இதுவரை நடந்தது என்ன?
ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, தோல்வி நிலவரங்கள் குறித்து கீழே விரிவாக காணலாம்.
இதுவரை நடைபெற்ற போட்டிகள்: 104
சொந்த அணி வெற்றி (இங்கிலாந்து) : 43
வருகை தந்த அணி வெற்றி : 23
ஆட்டம் டிராவில் முடிந்தது : 37
முதலில் பேட் செய்த அணி வெற்றி : 37
2வது பேட் செய்த அணி வெற்றி : 29
அதிகபட்ச ஸ்கோர்: 913 ரன்கள் ( ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து 1938)
குறைந்த ஸ்கோர் : 44 ரன்கள் ( இங்கிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலியா 1896)
முதல் இன்னிங்ஸ் சராசரி ரன்கள் : 343 ரன்கள்
2வது இன்னிங்ஸ் சராசரி ரன்கள் : 304 ரன்கள்
3வது இன்னிங்ஸ் சராசரி ரன்கள் : 238 ரன்கள்
இந்தியாவின் நிலவரம் எப்படி?
தற்போது இறுதிப்போட்டி நடக்கும் ஓவல் மைதானம் இந்திய அணிக்கு ராசியான மைதானம் என்று சொல்ல முடியாது. இந்தியாவின் கடந்த கால அனுபவங்கள் மிக கடினமானதாகவே அங்கு அமைந்துள்ளது. அதாவது, இந்திய அணி இதுவரை ஓவல் மைதானத்தில் 14 முறை விளையாடியுள்ளது. அதில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. 7 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.
ஓவலில் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கிய இந்தியா, அந்த டெஸ்ட் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி நாளை மறுநாள் தொடங்கும் போட்டிக்கு இந்திய அணிக்கு தன்னம்பிக்கை அளிக்கும்.