WTC 2023 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணி எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்!
ருதுராஜ் கெய்க்வாட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக பேக் அப் பிளேயராக அறிவிக்கப்பட்டபோது, தனது திருமணத்தின் காரணமாக விலகினார்.
ஏறக்குறைய மூன்று மாத இடைவெளிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியது. வருகின்ற ஜூன் 7 முதல் 11 வரை இந்திய டெஸ்ட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் சந்திக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டால் கடந்த 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை கைகளில் ஏந்தி வறட்சியை முடிவுக்கு கொண்டு வரும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். இவருடன் விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே மற்றும் புஜாரா என அனுபவம் வாய்ந்த வீரர்கள் களமிறங்குகின்றனர். ஆனால், ஒரு சில முக்கிய வீரர்கள் இந்த தொடரில் இருந்து விலகியது அதிர்ச்சியளிக்கிறது.
அணி எப்படி இருக்கும்..?
தொடக்க ஆட்டக்காரர்கள்:
இந்திய அணிக்கு தலைமை தாங்கும் ரோகித் சர்மா, சுப்மன் கில்லுடன் இணைந்து பேட்டிங்கை தொடங்குவார். கே.எல்.ராகுல் மூன்றாவது தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு இருந்தபோது, தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகினார். தற்போது இவர் இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து வருகிறார்.
இதையடுத்து, ருதுராஜ் கெய்க்வாட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக பேக் அப் பிளேயராக அறிவிக்கப்பட்டபோது, தனது திருமணத்தின் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டார்.
மிடில் ஆர்டர்:
நீண்ட நாட்களுக்கு பிறகு அஜிங்க்யா ரஹானே இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார். முன்னாள் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த ரஹானே பார்ம் அவுட் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். ரஞ்சி டிராபி மற்றும் ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் இடம் பிடித்தார். இவர் கடந்த ஜனவரி 2022ம் முதல் இந்திய அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புஜாரா இங்கிலாந்து கவுண்டியில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி நல்ல பார்மில் இருந்து வருகிறார். விராட் கோலி ஐபிஎல் 2023 சீசனில் கிட்டதட்ட 600க்கு அதிகமான ரன்களை குவித்தார். எனவே, இருவரும் இந்திய மிடில் ஆர்டரில் தூணாக இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சூர்யகுமார் யாதவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர்.
ஆல்-ரவுண்டர்கள்:
இந்திய டெஸ்ட் அணியில் ரவிசந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய மூன்று தலைசிறந்த ஆல் ரவுண்டர்கள் ஆணி வேராக உள்ளனர். அணியில் ஜடேஜா மற்றும் அஷ்வினின் இடம் உறுதி என்றாலும், அக்சார் பட்டேல் பேக் ஆப் பிளேயராக இருப்பார். இவர்களுடன் ஷர்துல் தாக்கூர் அணியில் உள்ள ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் ஆவார்.
வேகப்பந்து வீச்சாளர்கள்:
முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனட்கட் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக உனட்கட், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியபோதும், இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இருப்பினும், இவரது இடம் சந்தேகம்தான். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அற்புதமாக பந்துவீசிய முகேஷ் குமார் அணியில் பேக் அப் வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.
WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, இஷான் கிஷன், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.
காத்திருப்பு வீரர்கள்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்
WTC இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், டோட் மர்பி, மேத்யூ , ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்