Dhoni CSK : தோனி இடத்துக்கு இவர்தான் சரியான ஆளு.. தமிழக வீரரை தட்டித்தூக்க காத்திருக்கும் சிஎஸ்கே! விவரம் இதோ!
இனி வரும் ஐபிஎல் சீசன்களில் தோனிக்கு மாற்றான விக்கெட் கீப்பரை தமிழகத்தில் இருந்து தேர்வு செய்ய சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், இந்த ஆண்டும் விளையாட உள்ளார்.
அதேசமயம் 42 வயது ஆகும் தோனிக்கு இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டி தான் கடைசியாக இருக்கும். இதன் பின்னர் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது.
அஜிதேஷை தேர்வு செய்யும் சிஎஸ்கே?
இந்நிலையில், தோனிக்கு மாற்றான விக்கெட் கீப்பரை தமிழகத்தில் இருந்து தேர்வு செய்ய சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 21 வயதாகும் தமிழக வீரர் அஜிதேஷ் குருசாமியை தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்தார். 243.39 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 129 ரன்களை குவித்த இவர் நெல்லை அணியின் சிறந்த பினிஷராக செயல்பட்டார். இச்சூழலில், தான் மினி ஏலத்தில் தனது விலையை 20 லட்சமாக இவர் பதிவு செய்துள்ளார்.
அஜிதேஷ் கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை 100 ரன்களை, 161.3 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தொடரில் விக்கெட் கீப்பராகவும் கலக்கினார்.
முன்னதாக, குவாலிபையர் 2 ஆட்டத்தில், நெருக்கடியான சமயத்தில் களமிறங்கி 24 பந்துகளில் 48 ரன்களை குவித்து, நெல்லை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில், 7 போட்டிகள் விளையாடி 190.78 ஸ்ட்ரைக் ரேட்டியில் 414 ரன்களை குவித்தார்.
இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் இவரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சிஎஸ்கே வில் எடுக்கப்பட்டால் தோனிக்கு மாற்றான விக்கெட் கீப்பராக இவர் இருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே, இந்த சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, சிஎஸ்கேவில் இருந்து டுவைன் பிரிடோரியஸ், சிசாண்டா மகாலா, சேனாபதி, பென் ஸ்டோக்ஸ், ஜேமிசன், அம்பத்தி ராயுடு, பகத் வர்மா, ஆகாஷ் சிங் ஆகியோர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: T20 WC 2024: டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா விராட் கோலி? பி.சி.சி.ஐ. ஆலோசனை!
மேலும் படிக்க: Sreesanth: உங்களுக்கு என்னதான் பிரச்சனை... கடவுள் உங்கள மன்னிக்கவே மாட்டாரு... கம்பீரை சாடிய ஸ்ரீசாந்த்!