T20 WC 2024: டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா விராட் கோலி? பி.சி.சி.ஐ. ஆலோசனை!
டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் விராட் கோலி விளையாடுவாரா? இல்லையா? என்பது தொடர்பாக அவரிடம் பிசிசிஐ ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற்றது. இதில், இந்திய அணி ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதன்படி, கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியை தழுவியது. இது ரசிகர்களை மட்டும் இன்றி வீரர்களையும் மிகுந்த வேதனைக்கு ஆளாக்கியது.
ஆனால், இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இந்திய அணி உலகக் கோப்பையை தவறவிட்டிருந்தாலும், தொடர் நாயகன் விருதை இந்திய அணி வீரர் விராட் கோலி பெற்றார். அதேபோல், இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரரும் அவர் தான்.
விராட் கோலியிடம் ஆலோசிக்க உள்ள பிசிசிஐ:
ஐசிசி நடத்தும் ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் எப்படியும் கோப்பையை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் இந்திய அணி விளையாட உள்ளது.
முன்னதாக, டிசம்பர் 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆனால், இந்த டி20 போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்கள் விருப்ப ஓய்வின் காரணமாக டி20 போட்டியில் விளையாடவில்லை என்று பிசிசிஐ தெரிவித்தது.
உலகக் கோப்பையில் விளையாடுவாரா?
அதேநேரம், விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாட விரும்பவில்லை என்றும் அவர், ஒரு நாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் தான் இனி கவனம் செலுத்துவார் என்றும் கூறப்பட்டது. இதனால், அவர் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளதைப் போலவே பிசிசிஐ-க்கும் அந்த சந்தேகம் எழுந்துள்ளது.
இச்சூழலில், டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி விளையாடுவாரா? இல்லையா? என்பது தொடர்பாக அவரிடம் பிசிசிஐ ஆலோசனை செய்ய உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாடதபட்சத்தில், அவருக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் களமிறங்கும் வீரராக இஷான் கிஷான் தேர்வு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மாவே வழிநடத்தினால் நன்றாக இருக்கும் என்றும் பிசிசிஐ விரும்புகிறது.