T20 World Cup: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீழ்ந்தது ஏன்? - ஓர் அலசல்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த அணியாக இருந்தது. ஆனால், இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிலை வேறு மாதிரியாக இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த அணியாக இருந்தது. ஆனால், இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிலை வேறு மாதிரியாக இருக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று ஓர் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் டி20 உலகக் கோப்பையில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றுக்கு கூட முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது.
தொடக்கக் காலத்தில் கிரிக்கெட் என்றால் டெஸ்ட் வடிவில்தான் இருந்தது. பின்னர் 60 ஓவர்கள் ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமாகி அது 50 ஆக மாறியது. பின்னர், சுவாரசியத்தை அதிகரிக்க 20 ஓவர்கள் வடிவத்துக்கு மாற்றப்பட்டது.
ஐம்பது ஓவர் கிரிக்கெட் போன்று 20 ஓவர் கிரிக்கெட்டிலும் உலகக் கோப்பை போட்டி கொண்டு வரப்பட்டது. 2007ம் ஆண்டு நடந்த முதல் உலகக் கோப்பைப் போட்டி தொடரில் அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றி சாம்பியன் மகுடத்தை சூடியது.
அதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியும், 2010ம் ஆண்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது.
பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 2012ம் ஆண்டில் முதல் முறையாக சாம்பியன் ஆனது. அதைத் தொடர்ந்து 2014இல் நடந்த உலகக் கோப்பை தொடரில் இலங்கையும், பின்னர் 2016இல் வெஸ்ட் இண்டீஸும் சாம்பியன் ஆனது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது. 50 ஓவர் வடிவிலான உலகக் கோப்பை தொடரில் 1975ம் ஆண்டும், 1979ம் ஆண்டிலும் தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியனான அணி வெஸ்ட் இண்டீஸ் ஆகும்.
இப்படி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும், 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் தலா 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போதைய 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறவில்லை.
இதையடுத்து லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதல் லீக் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
அதையடுத்து, கடந்த 19ம் தேதி நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் இந்தத் தொடரில் முதல் வெற்றியை ருசித்தது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது. குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் 2 தோல்வியைத் தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதையடுத்து அந்த அணி வெளியேறியது. நிகோலஸ் பூரன் தலைமையிலான அனுபவமற்ற இளம் வீரர்கள் களமிறங்கியதால் இந்தத் தோல்வி ஏற்பட்டுவிட்டது என்றால் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தோல்விக்கான காரணம் என்ன?
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் குறைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் டுவிட்டரில் கமென்ட் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். நிதிப் பிரச்சனையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், குரூப் சுற்ரில் வெளியேறியது சோகமான நிகழ்வே. கேப்டன் பூரன் சிறப்பாக செயல்படாததே காரணமாகும் என்று மற்றொரு ரசிகர்கள் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்றால் அதிரடி காட்டி சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் தாய்நாட்டுக்காக விளையாடும்போது பெரிதாக சோபிப்பதில்லை என்று ஒரு ரசிகர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சீதோஷன நிலையும் பலம் வாய்ந்த அணிகளுக்கு கடும் சவாலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஜாம்பவான் அணியின் தோல்வியை கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியுடன்தான் பார்க்கிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே கூறத் தோன்றுகிறது.