ODI WC 2023 IND Vs PAK: அதிரடியாக ஆரம்பித்த பாகிஸ்தான் ஆட்டம் கண்டது எப்படி? ஓர் அலசல்!
அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சில் சரிந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று (அக்டோபர் 14) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
அதிரடி தொடக்கம் சரிந்தது எப்படி?
இந்த 12 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 191 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில், அதிரடியாக தங்களது ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் பேட்டிங் எந்த இடத்தில் சரிந்தது என்பது குறித்தான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக தங்களது ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதன்படி, முதல் மூன்று விக்கெட்டுகளை எடுப்பதற்கு இந்திய அணிக்கு 29.4 ஓவர்கள் தேவைப்பட்டது. 155வது ரன்னில் தான் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.
சரிந்த பாகிஸ்தான்:
அடுத்த 36 ரன்களுக்குள் பாகிஸ்தான் அணியை மொத்தமாக சுருட்டியது இந்திய அணி. அதன்படி, 32.2 வது ஓவரில் சவுத் ஷகீல் குல்தீப் யாதவ் பந்தில் எல்.பி.டபூள்யூ ஆகி வெளியேறினார். அடுத்ததாக வந்த இப்திகார் அகமது வெறும் 4 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் காலியானார்.
ஷதாப் கான் 2 ரன்களிலும், முகமது நவாஸ் 4 ரன்களிலும், ஹசன் அலி 12 ரன்களிலும், ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா இரண்டு ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினர். அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கத்திலே ஆடிய பாகிஸ்தான் வீரர்கள் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பந்து வீச்சில் சம்பவம் செய்த இந்தியா:
இந்தியாவின் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் தவிர மற்ற ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வெளிபடுத்தினர்.
அதன்படி, மொத்தம் 7 ஓவர்கள் வீசிய பும்ரா 1 ஓவர் மெய்டன் செய்து 19 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், 10 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 35 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி அசத்தினார்.
சுழல், வேகம் தாக்குதல்:
8 ஓவர்கள் வீசிய முகமது சிராஜ் 50 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஹர்திக் பாண்டிய 6 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையும் , ஜடேஜா வீசிய 9.5 ஓவர்களில் 38 ரன்களில் 2 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர்.
இப்படி இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி, 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே கொடுத்து பாகிஸ்தான் அணியினரின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்போது 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடிவருகிறது.
மேலும் படிக்க: ODI WC 2023 pakistan Team: உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் பலம் & பலவீனம் என்ன? - இந்தியாவில் அசத்துமா?
மேலும் படிக்க: https://tamil.abplive.com/sports/cricket/icc-cricket-world-cup-2023-ind-vs-pak-narendra-modi-stadium-ahmedabad-match-preview-144898