ODI WC 2023 IND Vs PAK: ’சம்பவம் இருக்கு'.. பகையோடு காத்திருக்கும் பாகிஸ்தான்; தட்டித் தூக்குமா இந்தியா?
ODI WC 2023 IND Vs PAK: இரு அணிகளும் இதுவரை இந்த தொடரில் தலா இரண்டு போட்டிகள் விளையாடியுள்ளன. இதில் இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.
இருதரப்பு போட்டி தொடங்கி, ஆசிய கோப்பைத் தொடர் உலகக் கோப்பைத் தொடர் வரை இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனி உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இந்த போட்டிக்காக இரு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தயாராவதைப் போல் இருநாட்டு ரசிகர்கள் தயாராவதும் பெரிதும் கவனிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கவுள்ளது.
இரு அணிகளும் இதுவரை இந்த தொடரில் தலா இரண்டு போட்டிகள் விளையாடியுள்ளன. இதில் இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. புள்ளிப்பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் இந்த தொடரில் மீண்டும் மோதிக்கொள்ளுமா என்பது லீக் போட்டிகளின் முடிவில்தான் தெரியவரும். இதனால் இந்த போட்டியின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக எகிறியுள்ளது.
இரு அணிகளும் சமீபத்தில் ஆசிய கோப்பைப் போட்டியில் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆனால் தற்போது இரு அணிகளும் தங்களின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்காக களத்தில் மிகவும் போராடுவார்கள் என்பதால், கட்டாயம் களத்தில் அனல் பறக்கும்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை ஊடகங்களில் பதிவு செய்வதற்காக மட்டும் பாகிஸ்தானில் இருந்து சற்று ஏறக்குறைய 60 ஊடகவியலாளர்கள் வந்துள்ளனர். அதேபோல், அதிகப்படியான பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் வந்துள்ளனர்.
Kickstarting the much-awaited #INDvPAK clash with a special performance! 🎵
— BCCI (@BCCI) October 12, 2023
Brace yourselves for a mesmerising musical special ft. Arijit Singh at the largest cricket ground in the world- The Narendra Modi Stadium! 🏟️
Join the pre-match show on 14th October starting at 12:30… pic.twitter.com/K6MYer947D
இரு அணிகளும் இதுவரை ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், இந்தியா 56 போட்டிகளிலும், பாகிஸ்தான் 73 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றைப் பொறுத்தவரை இந்தியாவுக்குச் சாதகமாகதான் முடிவுகள் உள்ளது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் இதுவரை ஏழு போட்டிகளில் வென்றதில்லை. அதாவது, உலகக் கோப்பையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஏழு முறை நேருக்கு நேர் மோதின - 1992, 1996, 1999, 2003, 2011, 2015, மற்றும் 2019 - ஏழு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி தரப்பில் கடந்த இரண்டு போட்டிகளில் டெங்கு பாதிப்பால் களமிறங்காத சுப்மன் கில், களமிறங்க 99 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
போட்டிக்கு முன்னதாக பாடகர் ஷ்ங்கர் மகாதேவன் மற்றும் இசைக் கலைஞர் அரிஜித் சிங் ஆகியோரின் இசை விருந்து ரசிகர்களுக்காக பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.