ODI WC 2023 pakistan Team: உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் பலம் & பலவீனம் என்ன? - இந்தியாவில் அசத்துமா?
உலக்கக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தொடர்பாக, இந்த தொகுப்பில் அறியலாம்
ODI WC 2023 India Team: உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் விவரங்கள் மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.
உலகக்கோப்பை தொடர்:
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள, ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் 5ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் மோதும் இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தியாவிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தான் அணியும் இந்தியா வந்துள்ளது. பாபர் அசாம் தலைமையிலான அந்த அணியின் பலம், பலவீனம், எதிர்த்து விளையாட உள்ள அணிகளின் விவரங்கள், விளையாட உள்ள மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் வீரர்களின் விவரங்கள்:
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது அப்ரிடி வாசிம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் பலம்:
பாகிஸ்தான் அணியின் முதன்மையான பலமாக பார்க்கப்படுவது அவர்களின் வேகப்பந்து வீச்சு தான். ஷாஹின் ஷா அஃப்ரிடி, ஹாரிஷ் ராஃப், ஹசன் அலி மற்றும் உஷாமா ஷாஹீன் ஆகிய, உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணிகளை தொடர்ந்து திணறடித்து வருகின்றனர். குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகியோர், 150 கிலோ மீட்டர் வேகத்தில் லைன் அண்ட் லெந்தில் துல்லியமாக பந்துவீசுவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால், சர்வதேச போட்டிகள் அவர்கள் தொடர்ந்து விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர். அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி அணியில் இடம்பெற்று இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலமாக உள்ளது. பேட்டிங்கிலும் பாபர் அசாம், ஃபகார் ஜமான் போன்ற வீரர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
பாகிஸ்தான் அணியின் பலவீனம்:
பாகிஸ்தான் அணியின் பெரிய பலவீனம் கடந்த ஆசியக்கோப்பை தொடரில் வெளிப்பட்டது. பாகிஸ்தான் முன்கள வீரர்கள் யாரும் அந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இமாம் உல் - ஹக், பாபர் அசாம் மற்றும் ஃபகார் ஜமான் உள்ளிட்டோரும், தொடர்ந்து ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதோடு, பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சும் அவர்களின் மிகப்பெரிய பலவீனமாக கருதப்படுகிறது. அணியில் இடம்பெற்றுள்ள ஒரே சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் கூட, அண்மை காலமாக பெரிதாக சோபிக்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இமாலய இலக்கை நிர்ணயித்தபோதும் கூட பாகிஸ்தான் அணி தோல்வியையே தழுவியது. இந்திய மைதானங்களை உணர்ந்து செயல்படும், சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாததே இதற்கு காரணமாகும். போதிய அனுபவமில்லாத அணியாக இருப்பதும் பாகிஸ்தானின் பலவீனமாக கருதப்படுகிறது. பாகிஸ்தானின் 15 பேர் கொண்ட அணியில், ஒன்பது வீரர்கள் முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட உள்ளனர். சவுத் ஷகீல், ஆகா சல்மான், முகமது வாசிம் மற்றும் உசாமா மிர் போன்ற வீரர்கள் அனுபவமற்றவர்கள் என்பது மட்டுமின்றி, அவர்கள் சமீபத்திய போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
பாகிஸ்தான் அணியின் போட்டி விவரங்கள்:
தேதி | போட்டி விவரங்கள் | மைதானம் |
அக்டோபர் 6 | பாகிஸ்தான் - நெதர்லாந்து | ஐதராபாத் |
அக்டோபர் 10 | பாகிஸ்தான் - இலங்கை | ஐதராபாத் |
அக்டோபர் 14 | பாகிஸ்தான் - இந்தியா | அகமதாபாத் |
அக்டோபர் 20 | பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா | பெங்களூரு |
அக்டோபர் 23 | பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் | சென்னை |
அக்டோபர் 27 | பாகிஸ்தான் - தென்னாப்ரிக்கா | சென்னை |
அக்டோபர் 31 | பாகிஸ்தான் - வங்கதேசம் | கொல்கத்தா |
நவம்பர் 4 | பாகிஸ்தான் - நியூசிலாந்து | பெங்களூரு |
நவம்பர் 11 | பாகிஸ்தான் - வங்கதேசம் | கொல்கத்த |
உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி:
இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, கடந்த 1992ம் ஆண்டு முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது. அதைதொடர்ந்து, 1999ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. அரையிறுதிக்கு 4 முறையும், காலிறுதிக்கு 2 முறையும் தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி, லீக் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.