Shewag Son: "15 வயதிலே ஐ.பி.எல்.லில் விளையாட உழைக்கிறான் என் மகன்" - பெருமையாக கூறிய தந்தை சேவாக்
ஐபிஎல் காரணமாக, நாட்டின் சிறிய மாநிலங்களைச் சேர்ந்த பல சிறுவர்கள் கிரிக்கெட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கி, ஐபிஎல்லில் பங்கேற்கவும், அதற்காக கடுமையாகப் பாடுபடவும் முயற்சி செய்து வருகின்றனர்.
முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் லீக்கின் மிகவும் முக்கியமான பல அம்சங்களுக்கு அடித்தளம் அமைத்தது, ஆனால் அதுவரை கிரிக்கெட் உலகில் கேள்விப்படாத விஷயமாக அது இருந்ததால் அப்போதைய வீரர்கள் ஒரு சந்தேகப் பார்வையிலேயே அணுகினர். எந்தவொரு புதிய நிகழ்வையும் போலவே, லீக் மற்றும் குறிப்பாக ஏலத்தின் செயல்முறை ஆகியவை வீரர்களுக்கு புரியவில்லை.
ஆனால் தற்போது அது மிகப்பெரிய வெற்றியாக அமைந்து துபாய், தென்னாபிரிக்க நாடுகள் ஐபிஎல்-இன் பிரான்சைஸ் அணிகளை, லோகோ, பெயர், ஜெர்சியுடன் பயன்படுத்தும் அளவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஐபிஎல் நட்சத்திரங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் முன்னிலையில் ‘தி இன்க்ரெடிபிள் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
15ஆம் ஆண்டு ஐபிஎல்
ஐபிஎல்லின் 15 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், டி20 ஃபிரான்சைஸ் போட்டியின் செயல்திறன் வெளிநாட்டு வீரர்களுக்கு எப்படி ஒரு முக்கியமான அளவுகோலாக மாறியுள்ளது என்பதைப் பற்றி பேசியுள்ளார்.
"எதிர்காலத்தில் இது மிகப் பெரிய லீக்காக மாறப் போகிறது என்பதை எங்களுக்கு கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி புரிய வைத்தனர். நீங்கள் இப்போது இருப்பதை விட அதிகமாக சம்பாதிப்பீர்கள் என்றார்கள். பணம் நிச்சயமாக ஒரு இரண்டாம் நிலை காரணியாக இருந்தாலும், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும், அவர்கள் எங்களை தூக்கி வீசிவிட்டு முன்னாள் வருவதற்கு, இது ஒரு பெரிய தளமாக மாறும் என்று நாங்கள் அப்போது நினைக்கவில்லை, ”என்று சேவாக் கூறினார்.
என் மகன் இப்போதே உழைக்கிறார்
“ஐபிஎல் இளம் திறமையாளர்களுக்கு பெரிய அளவில் பயனளித்துள்ளது. முன்னதாக, ரஞ்சி டிராபி ஆட்டங்களில் இருந்து யாரும் கவனிக்கப்படவில்லை, எனவே இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை. ஆனால் இப்போது நீங்கள் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு உங்கள் திறமையை வெளிப்படுத்தினால் உடனடியாக இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஐபிஎல் காரணமாக, நாட்டின் சிறிய மாநிலங்களைச் சேர்ந்த பல சிறுவர்கள் கிரிக்கெட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கி, ஐபிஎல்லில் பங்கேற்கவும், அதற்காக கடுமையாகப் பாடுபடவும் முயற்சி செய்துள்ளனர். உதாரணமாக, எனது மகனுக்கு 15 வயதாகிறது, ஐபிஎல்லில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற இப்போதே கடுமையாக உழைக்கிறான்." என்றார்.
தொலைக்காட்சி இல்லாமல் சாத்தியம் இல்லை
“சச்சின் டெண்டுல்கர், பொல்லாக், ஷேன் வார்னே ஆகியோருடன் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும் என இளைஞர்கள் எண்ணியிருக்க மாட்டார்கள். ஷேன் வார்னே, வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், தோனி ஆகியோருடன் விளையாடுவதை ஒரு இளம் கிரிக்கெட் வீரரின் குடும்பத்தினர் டிவியில் பார்க்கும்போது, அந்த இளைஞரின் கடின உழைப்பு பலனளித்ததாக குடும்பத்தினர் மத்தியிலும் இந்த திருப்தி உணர்வு ஏற்படுகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற ஒரு ஒளிபரப்பாளர் இருந்ததால்தான் இது சாத்தியமானது. தொலைக்காட்சி இல்லை என்றால், எந்த அணியில் இருந்தும் எந்த வீரரையும் அடையாளம் காண முடியாது. இன்று, ஒவ்வொரு ஐபிஎல் வீரரின் பெயரையும், முகத்தையும் தொலைக்காட்சியின் மூலம் நாம் அறிவோம்", என்றார்.