GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: காப்பீடு திட்டத்தின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

GST Rate: காப்பீடு திட்டத்தின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் செய்யப்படாதது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில கூட்டம்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமயிலான கூட்டத்தில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பாப்கார்னுக்கு 18 சதவீத வரி விதிக்கவும், பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை வரியை 18 சதவீதமாக அதிகரிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதோடு, ஆடை, காலணிகள் மற்றும் பழைய கார்களுக்கான வரியை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளையும் கவுன்சில் கூட்டம் வழங்கியுள்ளது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்தின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் மேற்கொள்ளாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏமாற்றமளித்த முடிவுகள்
பெரிய அளவிலான வரி விகிதங்களை குறைப்பது, உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான வரிவிதிப்பை தள்ளுபடி செய்வது மற்றும் மார்ச் 2026 காலக்கெடுவிற்குப் பிறகு இழப்பீட்டு செஸை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது குறித்த முக்கியமான விவகாரங்கள் மீதான முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உணவு டெலிவரி ஆப்ஸ் மீதான ஜிஎஸ்டியை 18% இல் இருந்து குறைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டாலும், விரைவு வர்த்தக நிறுவனங்கள் 18% வரி செலுத்தாததற்காக அபராதக் கட்டணங்களைத் தொடரும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் சொல்வது என்ன?
செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ காப்பீடு திட்டங்கள் மீதான வரி விகிதத்தை குறைப்பது குறித்தான அமைச்சர்கள் குழுவின் அறிக்கை மட்டுமே இறுதியானது அல்ல. உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் , சம்பந்தப்பட்ட GoM இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) கருத்துகளுக்காக காத்திருக்கிறோம். அவர்கள் அறிக்கைகளை இறுதி செய்து கவுன்சிலின் விவாதத்திற்கு சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
பொதுமக்கள் அதிருப்தி
உடல்நலம் மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் தொடர்பான முடிவெடுப்பதில் தவிர்க்க முடியாத தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், காப்பீட்டு நிறுவனங்கள், தரகர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோர் அடுத்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், அவசர காலங்களில் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கான காப்பீட்டு திட்டத்தின் மீது வரி விதிப்பதை ஏற்க முடியாது பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் கட்கரியும், மருத்துவ காப்பீடு மீதான வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். அன்றாட பயன்பாட்டில் உள்ள பல அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிர் காக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மீதான வரியை குறைக்க மத்திய அரசுக்கு மனமில்லையா என பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

