Tiruvannamalai ATM Theft: திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை; தீரன் பட பாணியில் கொள்ளைக் குழு தலைவன் கைது
திருவண்ணாமலையில் ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் தலைவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஏ.டி.எம். கொள்ளை
மேற்கண்ட இடங்களில் இருந்த 4 ஏ.டி.எம். மையங்களில் ரூபாய் 72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. 4 மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், இவர்கள் அனைவரையும் பிடிக்க 9 தனிப்படைகளை போலீசார் அமைத்தனர். வேலூர் சரக காவல் துணைத்தலைவர் முத்துச்சாமி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த தனிப்படைகள் சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகள், முக்கிய வழித்தடங்களில் சென்ற வாகனங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படைகள் அமைப்பு:
போலீசாரின் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் தங்கியிருந்து கொள்ளையடிக்க திட்டமிட்ட இடங்களை நோட்டமிட்டதும் தெரியவந்தது.
உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் திருவள்ளூர் எஸ்.பி. செபாஸ்கல்யாண் தலைமையிலான போலீசார் ஆந்திராவிற்கும், வேலூர் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் தலைமையிலான தனிப்படை குஜராத்திற்கும், திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை ஹரியானாவிற்கும், திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கர்நாடகாவிற்கும் விரைந்தனர்.
கொள்ளை கும்பல் தலைவன் கைது:
முதற்கட்டமாக இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளை ஹரியானாவில் போலீசார் கைது செய்தனர். கொள்ளை கும்பல் தலைவனான முகமது ஆரிப், வயது 35, மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அவனது கூட்டாளியான முகமது ஆசாத், வயது 37, ஆகிய இருவரையம் ஹரியானாவில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ஏ.டி.எம். மையங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 3 லட்சம் பணத்தையும், கொள்ளைக்காக இவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவனான முகமது ஆரீப் ஹரியானாவில் உள்ள நூ மாவட்டத்தில் உள்ள சோனாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு குற்றவாளியான ஆசாத் ஹரியானாவின் புன்ஹானா மாவட்டத்தில் உள்ள மைமாகேரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
கொள்ளை சம்பவத்தில் இவர்களுக்கு உடந்தையாக இருந்த மற்ற குற்றவாளிகளை பிடிக்கும் பணியையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட இந்த குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து டெல்லியில் இருந்து திருவண்ணாமலைக்கு அழைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு போலீசாருக்கு பெரும் தலைவலியை தந்த இந்த ஏடிஎம் மைய கொள்ளை கும்பல் தலைவனை கைது செய்திருப்பதால் மற்ற குற்றவாளிகளும் விரைவில் பிடிபடுவார்கள் என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.