Ishan Kishan ODI record: ஒரே போட்டியில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்த இஷான் கிஷன்
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம், அதிவேகமாக இரட்டை சதம் விளாசியவர் என்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை இஷான் கிஷன் படைத்துள்ளார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்த நிலையில், சிட்டகாங் மைதானத்தில் தொடரின் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன்:
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். தவான் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன், கோலியுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வங்கதேசத்தின் பந்துவீச்சினை நாலாபுறமும் சிதறடித்து ருத்ரதாண்டவம் ஆடிய 24 வயதான இஷான் கிஷன், 81 பந்துகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். இதையடுத்து தனது ஆட்டத்தை இன்னும் விரைவுபடுத்திய இஷான் கிஷான், சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசினர். இதன் மூலம் வெறும் 126 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதில் 23 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள் அடங்கும். அதோடு, தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்ய அவர் வெறும் 45 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். தொடர்ந்து, 210 ரன்கள் எடுத்திருந்தபோது, டஸ்கின் அகமது பந்துவீச்சில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷன் அவுட்டானார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இஷான் கிஷன் மாறியுள்ளார்.
அதன்படி,
- 2011 ஆம் ஆண்டு மிர்பூரில் வீரேந்திர சேவாக்கின் 175 ரன்களை முறியடித்து, வங்கதேச அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை இஷான் கிஷன் எட்டியுள்ளார்.
- ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பட்டியலில், கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்
- சச்சின், சேவாக் மற்றும் ரோகித் சர்மாவை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதமடித்த 4வது வீரர் இஷான் கிஷன்
- சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய 9வது வீரர்
- குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசியவர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்
- வங்கதேசத்தில் அந்நாட்டிற்கு எதிராக தனிநபரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற ஷேன் வாட்சனினின் சாதனையை முறியடித்தார்
- ஒருநாள் போட்டியில் குறைந்த ஓவர்களில் இரட்டை சதம் விளாசியவர் என்ற பட்டியலில் சேவாக்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்
- சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய முதல் வீரர்
- 112 பந்துகளில் 150 ரன்களை நிறைவு செய்ததன் மூலம் குறைந்த பந்துகளில் 150 ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்
- ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக அதிக ரன்களை எடுத்த வீரர் இஷான் கிஷன்
முன்னதாக, கடந்த 2005ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஜெய்பூரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 145 பந்துகளில் 183 ரன்களை சேர்த்தார். இதுவே, இதுநாள்வரை ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆக இருந்தது. அந்த சாதனையை, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.