Virender Sehwag: ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர்: சேவாக் வைத்த முக்கிய கோரிக்கை!
ஒருநாள் கிரிக்கெட்டில் வேண்டுமானால் விடைபெறுங்கள் ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுங்கள் என்று டேவிட் வார்னருக்கு இந்திய வீரர் வீரேந்தர சேவாக் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதில், கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தான் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி.
முன்னதாக சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமற்றத்தை கொடுத்தது. முக்கியமாக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அவர் ஒரு நாள் போட்டிகளில் 6932 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 8695 ரன்களும் குவித்துள்ளார். அதேபோல் சர்வதேச டி 20 போட்டிகளில் 2894 ரன்களும் எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுங்கள்:
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வேண்டுமானால் விடைபெறுங்கள் ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுங்கள் என்று டேவிட் வார்னருக்கு இந்திய வீரர் வீரேந்தர சேவாக் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக சேவாக் பேசுகையில், ” டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு விளையாட வந்தார். அந்த சமயத்தில் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே அவர் அறிமுகமாகி இருந்தார். ஆனால் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடியதை பார்த்த போது இவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கான திறமை இருப்பது எனக்கு நன்றாக தெரிந்தது.
ஆனால் அவரைப் போன்ற இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தன்னம்பிக்கையை அந்த வயதில் கொண்டிருக்க மாட்டார்கள். இருப்பினும் நான் அவரால் டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகளில் அசத்த முடியும் என்று கருதினேன்.
நேரடியாக சொன்னேன்:
இது பற்றி நேரடியாகவே சொன்ன போது வாய்விட்டு சிரித்த அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று சொன்னார். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாள் முழுவதும் பவர் பிளே போல் இருக்கும் என்பதால் நீங்கள் டெஸ்டில் விளையாட வேண்டும் என்று நான் சொன்னேன். அதற்கு அப்படியானால் நான் கண்டிப்பாக விளையாடுவேன் என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். பின்னர் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் நான் அப்படி சொன்னதற்காக மகிழ்ச்சியடைந்து மெசேஜ் செய்தார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சேவாக், “தற்போது அவர் பேட்டிங் செய்யும் விதத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறக்கூடாது என்பது என்னுடைய சொந்த கருத்தாகும். இருப்பினும் 35 – 36 வயதில் நீங்கள் குடும்பத்தை பற்றி சிந்திப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். தற்போது ஃபிட்னஸ் அளவில் எந்த குறையுமில்லாத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற மனதளவில் முடிவெடுத்துள்ளார் என்று நினைக்கிறேன். அவர் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார் என நம்புகிறேன்”என்று தெரிவித்துள்ளார்.