IND vs PAK: மீண்டும் குறுக்கிட்ட மழை... தடைபட்ட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்..!
இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் மீண்டும் தடைபட்டதால் ரசிகர்கள் மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்திய அணி நிர்ணயித்த 357 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 11 ஓவர்களில் 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டுள்ளது.
மழையால் தொடர் தடை:
இந்தியா – பாகிஸ்தான் அணி மோதல் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத சூழலில், நடப்பு ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் விறுவிறுப்புக்கு பதில் எரிச்சலையும், விரக்தியையும்தான் ரசிகர்களுக்கு அளித்தது எனலாம். காரணம், இரண்டு நாட்களாக நடக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிடுவதும், ஆட்டம் தடைபடுவதும், பின்னர் தொடங்குவதும் என இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், 357 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் பேட்டிங் மழையால் தடைபட்டுள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 357 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்த நிலையில், பக்கர் ஜமான் – இமாம் உல் ஹக் ஆகியோர் ஜோடியாக களமிறங்கினர். பக்கர் ஜமான் பும்ரா வீசிய முதல் ஓவரில் தடுமாற, இமாம் உல் ஹக் ஏதுவான பந்துகளை அடித்தார். இமாம் உல் ஹக் 18 பந்தில் 9 ரன்களை எடுத்த நிலையில் பும்ரா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
தடுமாறும் பாகிஸ்தான்:
இதையடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் களமிறங்கினார். பாபர் அசாம் – பக்கர் ஜமான் ஜோடி மிகவும் நிதானமாக ஆடியது. ஏனெனில் மைதானத்தில் பும்ரா. சிராஜ் பந்து சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. பாபர் அசாம் மிகவும் நிதானமாக ஆடிய நிலையில் 2 பவுண்டரிகளை விளாசினார். ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தில் கேப்டன் பாபர் அசாம் 24 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார். 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்காக ரிஸ்வான் களமிறங்கினார்.
ரிஸ்வான் வந்த முதல் பந்திலே கேட்ச் மற்றும் எல்.பி.டபுள்யூவிற்கு இந்தியா ரிவியூ செய்தது. ஆனால், அதில் அவர் தப்பிவிட்டார். பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் போட்டியா?
ஏற்கனவே நடந்த லீக் போட்டியிலும் இந்திய அணி முதலில் பேட் செய்த பிறகு மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் அணி 11 ஓவர்கள் வரை பேட் செய்து விட்டனர். இந்த நிலையில், ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக மழை நின்றுவிட்டதாலும், மைதானம் உலர்ந்துவிட்டதாலும் மைதானத்தை சுற்றி மூடப்பட்டிருந்த தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் ஆட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓவர்கள் குறைக்கப்படுமா? அல்லது 50 ஓவர்களே முழுமையாக விளையாடப்படுமா? என்றும் எதிர்பார்பபும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க: IND vs PAK: ருத்ரதாண்டவம் ஆடிய இந்தியா.. கோலி, ராகுல் அபார சதம்.. 357 ரன்கள் பாகிஸ்தானுக்கு டார்கெட்..!
மேலும் படிக்க: Watch Video: 'யாருமே செய்யாத ஒன்னு..' ஷாஹீன் அப்ரிடி முதல் ஓவரிலே சிக்ஸர்.. அரிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா..!