IND vs SL 2nd Test Preview: உள்நாட்டில் தொடர்ந்து 15-வது டெஸ்ட் தொடர் வெற்றியை நோக்கி இந்தியா...! புதிய சாதனையை படைக்குமா?
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் மூலம் உள்நாட்டில் தொடர்ச்சியாக 15வது டெஸ்ட் தொடர் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.
இந்தியாவும் இலங்கையும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. பெங்களூரில் அமைந்துள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெறும் 15வது டெஸ்ட் தொடர் வெற்றி ஆகும்.
இந்திய மண்ணில் இந்திய அணி கடைசியாக 2012-13ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் தொடரை இழந்து தோல்வி அடைந்திருந்தது. இதற்கு பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வி என்பதையே சந்தித்தது கிடையாது.
இந்த 10 ஆண்டுகளில் குறிப்பாக 2016 முதல் 2020 காலகட்டத்தில் அதாவது 42 மாதங்கள் இந்திய அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 அணியாக திகழ்ந்தது. இந்த காலகட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி பொறுப்பு வகித்தார். இந்த காலகட்டத்தில் இந்திய அணி 2018ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மிகப்பெரிய வெற்றி ஆகும்.
ஆஸ்திரேலியா அணி உள்நாட்டில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது. அதுவும் இரண்டு முறை தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. 1994ம் ஆண்டு நவம்பர் முதல் 2000 நவம்பர் வரையிலும், 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை 10 டெஸ்ட் தொடர்களையும் வென்று சாதனை படைத்துள்ளது.
1976ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 டெஸ்ட் போட்டி தொடர்களை உள்நாட்டிலே வென்று அசத்தியுள்ளது. மார்ச் 1998ம் ஆண்டு முதல் நவம்பர் 2001ம் ஆண்டு வரை மேற்கிந்திய தீவுகள் அணி 7 டெஸ்ட் தொடரை உள்நாட்டில் வென்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணி மே 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு மே வரை 7 டெஸ்ட் தொடர்களை உள்நாட்டில் வென்று அசத்தியுள்ளது.
இந்த வரிசையில் இந்திய அணி வேறு எந்த அணிகளும் தொட முடியாத அளவில் நம்பர் 1 அணியாக உள்நாட்டில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர் வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்