IND VS SL 2ND TEST : இலங்கையிடம் 252 ரன்களுக்கு சுருண்டது இந்தியா..! ஸ்ரேயாஸ் அய்யர் அபார ஆட்டம்..!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்களை குவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் இலங்கை அணி இந்த தொடரின் கடைசி போட்டியாக பெங்களூரில் இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. பகலிரவு போட்டியான இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெயவிக்ரமா வீசிய நோ பாலில் மயங்க் அகர்வால் 4 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிய ஹனுமா விஹாரி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினார். அவர் 31 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெயவிக்ரமா பந்தில் ஆட்டமிழந்தார்.
பெங்களூர் மைதானத்தில் சிறப்பான ரன் எண்ணிக்கையை கொண்டுள்ள முன்னாள் கேப்டன் விராட்கோலி தனது கம்பேக்கை அளிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் 23 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.
அடுத்து 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்டும், ஸ்ரேயாஸ் அய்யரும் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினர். களமிறங்கியது முதலே அதிரடியாகவே ஆடிய ரிஷப் பண்ட் 26 பந்தில் 7 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எம்புல்டேனியா பந்தில் போல்டானார். அவருக்கு பின்பு களமிறங்கிய எந்த வீரர்களும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த போட்டியில் 175 ரன்கள் குவித்த ஜடேஜா இந்த இன்னிங்சில் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார், அவருக்கு பின்னர், களமிறங்கிய ஆல்ரவுண்டர் அஸ்வினும் 13 ரன்களில் அவுட்டானார்.
இந்திய அணியின் விக்கெட்டுகள் ஒரு புறம் சரிந்தாலும், தனி ஆளாக ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் போராடினார், அவரது ஆட்டத்தால்தான் 200 ரன்களை கூட கடக்குமா என்ற நிலையில் இருந்த இந்தியா, 250 ரன்களை கடந்தது. இந்திய அணிக்காக தனி ஆளாக போராடிய ஸ்ரேயாஸ் அய்யர் கடைசி விக்கெட்டாக வெளியேறினார். அவர் 98 பந்தில் 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் 92 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 252 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது.
இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக பிரவீன் ஜெயவிக்ரமா 17.1 ஓவர்கள் வீசி 81 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். லசித் எம்புல்டேனியாவும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தனஞ்ஜெய டி சில்வா 2 விக்கெட்டுகளையும், லக்மால் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்