IND vs BAN: பிரம்மாண்ட வெற்றி! வங்கதேசத்தை சுருட்டி வீசிய அஸ்வின்! 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!
சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் இரண்டாவது இன்னிங்சில் 515 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் களமிறங்கியது முதலே நெருக்கடி அளித்தனர்.
இந்தியா வெற்றி:
நேற்று 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்று ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணிக்கு அஸ்வின் நெருக்கடி அளித்தார். அவரது சுழலில் சுருண்ட வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி 280 ரன்களில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
3வது நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 158 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், வங்கதேச அணிக்காக ஷாண்டோ – ஷகில் அல் ஹசன் இன்று ஆட்டத்தை தொடங்கினர். கேப்டன் ஷாண்டோவிற்கு ஒத்துழைப்பு தந்த அனுபவ ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 56 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அஸ்வின் - ஜடேஜா சுழல் தாக்குதல்:
இன்றைய ஆட்டத்தில் அஸ்வினும், ஜடேஜாவும் சுழல் தாக்குதல் நடத்த வங்கதேச வீரர்களால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. மறுமுனையில் யாரும் துணை அளிக்காவிட்டாலும் கேப்டன் ஷாண்டோ தனி ஆளாக வங்கதேச அணிக்காக போராடினார். இதனால், வங்கதேச அணி 200 ரன்களை கடந்தது. ஆனாலும், பின்வரிசை வீரர்கள் அடித்து ஆட முயற்சித்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
கடைசியாக தனி ஆளாக போராடிய ஷாண்டோ 8வது விக்கெட்டாக ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 127 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இறுதியில் வங்கதேச அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் அஸ்வின்:
இந்திய அணிக்காக இரண்டாவது இன்னிங்சில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 21 ஓவர்களில் 88 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா 15.1 ஓவர்களில் 58 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சென்னை மண்ணில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்காக டெஸ்ட் ஆடிய அஸ்வின் சதம் மற்றும் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் அஸ்வின் கைப்பற்றி அசத்தினார்.
முன்னதாக, முதல் இன்னிங்சில் இந்தியா அஸ்வினின் 113 ரன்கள், ஜடேஜாவின் 86 ரன்கள் உதவியுடன் 376 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களை எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்காக ரிஷப்பண்ட் மற்றும் சுப்மன்கில் சதம் விளாசினர். ரிஷப் பண்ட் 109 ரன்களும், சுப்மன்கில் 119 ரன்களும் எடுத்துள்ளனர்.