நான் ஷாரூக் கான்... நடிக்க மாட்டேன் அடிப்பேன்... பந்து நொந்து போகும் பேட்ஸ்மேன் இவன்!
சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
சையத் முஷ்டாக் அலி தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய கர்நாடக அணி 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணியில் ஷாரூக் கான் கடைசி கட்டத்தி களமிறங்கி அதிரடி காட்டினார். குறிப்பாக ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் தமிழ்நாடு அணிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அசத்தலாக ஆடிய ஷாரூக் கான் ஒரு சிக்சர் அடித்து தமிழ்நாடு அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் தமிழ்நாடு வெல்ல காரணமாக இருந்த ஷாரூக் கான் எப்படி தமிழ்நாடு அணிக்கு வந்தார்?
1995ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஷாரூக் கான். இவருடைய தாய் மற்றும் அவருடைய சகோதரிகள் நடிகர் ஷாரூக் கானின் தீவிர ரசிகையாக இருந்ததால் இவருக்கு அந்தப் பெயரையே வைத்தனர். பின்னாலில் அதுவே இவரை கிரிக்கெட் போட்டியின் போது கிண்டல் செய்ய மிகவும் ஏதுவாக அமைந்தது. 13 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணியில் முதல் முறையாக ஷாரூக் கான் இடம்பெற்றார். அதில் சிறப்பாக விளையாடி வந்த இவர் 2013ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பிஹார் தொடரில் தமிழ்நாடு சார்பில் களமிறங்கினார்.
இந்தத் தொடரில் 6 போட்டிகளில் 624 ரன்கள் அடித்து ரன் மழை பொழிந்தார். அத்துடன் 18 விக்கெட்களையும் வீழ்த்தி ஒரு ஆல்ரவுண்டராகவும் இவர் பிரகாசித்தார். எனினும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மிகவும் மனம் உடைந்த ஷாரூக் கான் சற்று வருத்தத்தில் இருந்தார். எனினும் தமிழ்நாடு அணி சார்பாக விஜய் ஹாசரே தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு டி20 அணியிலும் இவர் இடம்பிடித்தார்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரிலும் களமிறங்கிய ஷாரூக் முதல் சீசனில் சரியாக விளையாடவில்லை.இரண்டாவது சீசனில் அசத்திய ஷாரூக் கான் 325 ரன்கள் அடித்து மீண்டும் தமிழ்நாடு அணியில் இடம்பிடித்தார். இந்தாண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரை தமிழ்நாடு அணி வென்று அசத்தியது. இதிலும் ஷாரூக் கான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடிய ஷாரூக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி 5.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு சில முக்கியமான ஆட்டங்களை ஆடினார். இதனைத் தொடர்ந்து இந்தாண்டும் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரிலும் ஷாரூக் கான் தமிழ்நாடு அணிக்கு பெரும் பக்கபலமாக அமைந்தார். விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் 8 போட்டிகளில் 6 இன்னிங்ஸில் களமிறங்கி 101 ரன்கள் அடித்துள்ளார். குறிப்பாக இவர் கடைசி கடத்தில் களமிறங்கி சில முக்கியமான கேமியோ இன்னிங்ஸ் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:கடைசி பந்தில் சிக்சர்... தமிழ்நாடை காப்பாற்றிய ஷாரூக்கான்... தொடர்ந்து 2வது முறை சாம்பியன்!