TN vs Karnataka: கடைசி பந்தில் சிக்சர்... தமிழ்நாடை காப்பாற்றிய ஷாரூக்கான்... தொடர்ந்து 2வது முறை சாம்பியன்!
தமிழ்நாடும் கர்நாடகாவும் மோதிய இந்த போட்டியில் தமிழ்நாடு கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. தமிழக வீரரான ஷாரூக்கான் அட்டகாசமாக கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.
இந்தியாவின் முக்கிய உள்ளூர் தொடரான சையத் முஷ்தாக் அலி டி20 தொடரின் இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்நாடும் கர்நாடகாவும் மோதிய இந்த போட்டியில் தமிழ்நாடு கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. தமிழக வீரரான ஷாரூக்கான் அட்டகாசமாக கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.
தமிழ்நாடு அணியின் கேப்டனான விஜய் சங்கரே டாஸை வென்றிருந்தார். ஸ்கோரை சேஸ் செய்யப்போவதாக அறிவித்தார். மனீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணி முதலில் பேட் செய்தது.
கர்நாடக அணியின் தொடக்கமே அதிர்ச்சிக்குளான வகையில் இருந்தது. தொடக்கத்திலேயே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தனர். பவர்ப்ளே முடிவில் 32 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். தமிழ்நாடு சார்பில் இடக்கை ஸ்பின்னரான சாய் கிஷோர் பவர்ப்ளேயில் 3 ஓவர்களை வீசியிருந்தார். இந்த 3 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டுமே கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தார். இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை விஜய் சங்கர் சாய் கிஷோரின் கையில் கொடுத்தார். வீசிய முதல் பந்திலேயே ரோஹன் கடமை போல்டாக்கி மிரட்டினார். பவர்ப்ளேயின் கடைசி ஓவரான 6 வது ஓவரில் கேப்டன் மனீஷ் பாண்டேவையும் சாய் கிஷோர் போல்டாக்கினார்.
இடையில் இன்னொரு இடக்கை ஸ்பின்னரான சஞ்சய் யாதவ் முக்கிய வீரரான கருண் நாயரை போல்டாக்கினார். தமிழகத்தின் சுழலில் சிக்கி கர்நாடகாவின் டாப் ஆர்டர் சின்னாபின்னமாகியிருந்தது. இதன்பிறகு, சரத் மற்றும் அபினவ் மனோகர் கூட்டணி போட்டனர். இவர்கள் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்கும் வகையில் பார்ட்னர்ஷிப் போட்டனர். மிடில் ஓவர்களில் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் சேர்ந்து 55 ரன்களை அடித்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பையும் சாய் கிஷோரே உடைத்தார். 16 ரன்களில் சாய் கிஷொரின் பந்தில் சரத் சாய் சுதர்சனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
4⃣- 0⃣- 1⃣2⃣- 3⃣! 👍 👍@saik_99 kept things tight with the ball & scalped three Karnataka wickets in the all-important #SyedMushtaqAliT20 #Final. 👏 👏 #TNvKAR
— BCCI Domestic (@BCCIdomestic) November 22, 2021
Watch all his wickets 🎥 🔽https://t.co/5gj0rsX6Fs pic.twitter.com/RD7fizpYpX
தொடக்கத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசிய தமிழக பௌலர்கள் இறுதிக்கட்டத்தில் கொஞ்சம் தடுமாறினர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 55 ரன்களை கொடுத்தனர். நடராஜனும் சந்தீப் வாரியரும் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினர். இவர்கள் இருவரும் வீசிய கடைசி 3 ஓவர்களில் மட்டும் 42 ரன்களை வழங்கியிருந்தனர். அபினவ் மனோகர் 46 ரன்களை அடித்து சந்தீப் வாரியரின் பந்தில் அவுட் ஆக, கடைசி நேரத்தில் அதிரடி காட்டி ப்ரவீன் துபே 33 ரன்களை சேர்த்தார். இவர்களின் ஆட்டத்தால் கர்நாடகா அணியின் ஸ்கோர் 151 ஆக உயர்ந்தது.
சையத் முஷ்தாக் அலி கோப்பையை வெல்ல தமிழகம் 152 ரன்கள் எடுத்தாக வேண்டிய சூழலில் சேஸிங்கை தொடங்கியது. தமிழக அணியின் ஓப்பனர்களாக ஜெகதீசனும் ஹரி நிஷாந்தும் இறங்கியிருந்தனர். ஜெகதீசன் ஒரு முனையில் ஆங்கர் இன்னிங்ஸ் ஆட ஆயத்தமாக, ஹரி நிஷாந்த் இன்னொரு முனையில் பௌலர்களின் தவறான டெலிரிக்களை பவுண்டரியும் சிக்சருமாக அடித்துக் கொண்டிருந்தார். 12 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹரி நிஷாந்த் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
WHAT. A. FINISH! 👌 👌
— BCCI Domestic (@BCCIdomestic) November 22, 2021
A last-ball SIX from @shahrukh_35 does the trick! 💪 💪
Tamil Nadu hold their nerve & beat the spirited Karnataka side by 4 wickets to seal the title-clinching victory. 👏 👏 #TNvKAR #SyedMushtaqAliT20 #Final
Scorecard ▶️ https://t.co/RfCtkN0bjq pic.twitter.com/G2agPC795B
இந்த விக்கெட் தமிழகத்தின் ரன்ரேட் வேகத்தை மொத்தனாக குறைத்தது. போதாக்குறைக்கு சாய் சுதர்சனும் கருண் நாயரின் பந்தில் lbw ஆக, தமிழகத்திற்கு மேலும் அழுத்தம் கூடியது. சுஜித், கரியப்பா, கருண் நாயர், ப்ரவீன் துபே என கர்நாடகாவின் ஸ்பின்னர்கள் அனைவருமே மிகச்சிறப்பாக வீசிக்கொண்டிருந்தனர்
இந்நிலையில் கேப்டன் விஜய் சங்கரும், ஜெகதீசனும் கூட்டணி போட்டு அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், ஒரு பக்கம் ரன்ரேட்டும் எகிறிக்கொண்டிருந்தது. இருவரும் பெரிய ஷாட்களை அடிக்க முயன்றாலும் எதுவுமே சரியாக கனெக்ட்டே ஆகவில்லை. இதனால், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து சிங்கிள் மட்டுமே தட்டினர். கடைசி 5 ஓவர்களில் அணியின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், கரியப்பா வீசிய 16 வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் விஜய் சங்கர் மற்றும் ஜெகதீசன் இருவரும் பெரிய ஷாட்டுக்கு முயன்று சரியாக கனெக்ட் ஆகாமல் கேட்ச் ஆகி வெளியேறினர். ஜெகதீசன் 46 பந்துகளில் 41 ரன்களையும், விஜய் சங்கர் 22 பந்துகளில் 18 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். தமிழக அணியின் மீதான அழுத்தம் இன்னும் கூடியது. ஷாரூக்கான் மட்டுமே ஒரே பெரிய நம்பிக்கையாக இருந்தார்.
Two years ago , lost in the last ball in a final and to dig deep n find a way to win against the same opponent on the Last ball was great too watch. Well done to Karnataka on a brilliant tournament and very well done to @TNCACricket on defending the title.❤️🌟 #smat2021
— DK (@DineshKarthik) November 22, 2021
எதிர்பார்த்ததை போலவே சிறப்பாக ஆடிய ஷாரூக்கான் 12 பந்துகளில் 24 ரன்களை எடுத்து, கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலைக்கு போட்டியை கொண்டு வந்தார். பரபரப்பான அந்த கடைசி ஓவரை இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ப்ரதிக் ஜெயின் வீசினார். முதல் பந்தில் தேர்டு மேனில் ஒரு பவுண்டரியை அடித்து இரண்டாவது பந்தில் சிங்கிள் தட்டி ஸ்ட்ரைக்கை ஷாரூக்கானிடம் கொடுத்தார் சாய் கிஷோர். மீண்டும் இரண்டு சிங்கிள்கள் வர, டைசி இரண்டு பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு ஒயிடோடு அடுத்த பந்தில் ஷாரூக்கான் 2 ரன்கள் ஓட, கடைசிப்பந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை உருவானது. பரபரப்பான இந்த கட்டத்தில் ஷாரூக்கான் சிக்சர் அடித்து தமிழ்நாடை சாம்பியனாக்கினார்.
2019 ஆம் ஆண்டு சீசனில் கர்நாடகாவும் தமிழ்நாடுமே இறுதிப்போட்டியில் மோதியிருந்தது. அந்த போட்டியில் கர்நாடகா 1 ரன் வித்தியாசத்தில் வென்றிருக்கும். கிட்டத்தட்ட அந்த போட்டியை போன்றே நெருக்கமாக சென்ற இந்த போட்டியை ஷாரூக்கானின் அதிரடியால் தமிழ்நாடு சிறப்பாக வென்றிருக்கிறது. மூன்றாவது முறையாக தமிழ்நாடு சாம்பியன் ஆகியிருக்கிறது. கடந்த சீசனிலும் தமிழ்நாடே சாம்பியன் ஆகியிருந்தது.