Ashes 3rd Test: பழிக்குப்பழி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து..! ஆஷஸை கைப்பற்றும் முனைப்பில் ஸ்டோக்ஸ் படை..!
Ashes 3rd Test: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
Ashes 3rd Test: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
251 ரன்கள் இலக்கு:
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளை வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 237 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 224 ரன்னில் ஆட்டமிழக்க, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது.
ஹாரி ப்ரூக் அபாரம்:
பேட்டிங்கிற்கு மிகவும் சவாலான இந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி 4வது நாளிலேயே முடிவை எட்டும் என அனைவரும் எதிர்பார்த்தைப் போலவே, போட்டி 4வது நாளில் முடிவினை எட்டியது.
இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாகவும் பொறுப்புடனும் ஆடியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கார்வ்லே 44 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அதேபோல், சிறப்பாக ஆடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் 75 ரன்கள் குவித்தார். இவர்களுடன் கிரிஸ் வோக்ஸ் 32 ரன்களும், பென் டெக்கெட் 23 ரன்களும் ஜோ ரூட் 21 ரன்களும் சேர்த்தனர்.
தொடரில் நீடிக்கும் இங்கிலாந்து:
இறுதியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் ஹாட்ரிக் வெற்றியை தடை செய்ததுடன், இந்த தொடரில் இன்னும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்த வெற்றி மூலம், 1 - 2 என தனது கணக்கை துவங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக உள்ள பேட் கம்மின்ஸ் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இதுவரை தோல்வியே சந்திக்காத கேப்டனாக இருந்தார். இந்த போட்டிக்கு முன்னர் வரை 6 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள பேட் கம்மின்ஸ் இதுவரை 5 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் ட்ராவையும் சந்தித்துள்ளார். இந்த போட்டியில் தோல்வியைச் சந்தித்ததால் பேட் கம்மின்ஸ் சந்தித்த முதல் தோல்வியாக பதிவாகியுள்ளது.