"MI-ஐ அன்பாலோ செய்தாரா ஹர்திக்? பிளே-ஆஃப் கனவு கலைந்த நிலையில் வைரலாகும் தகவல்கள்.. நடந்தது என்ன?
கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே சுமூகமான உறவு இல்லையோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி பந்து தோல்வியைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே-ஆஃப் கனவு கலைந்தது.
பாண்டியாவுடன் விரிசல்?
இந்தத் தோல்வியைத் தாண்டி, தற்போது கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே சுமூகமான உறவு இல்லையோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா உடல்நலக்குறைவால் விளையாட முடியாத நிலையில் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்தினார். இருப்பினும், இந்த சீசன் முழுவதும் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணிக்கு, இது வரலாற்றிலேயே ஒரு மோசமான தொடராக அமைந்தது.
இன்ஸ்டாகிராம் 'அன்பாலோ' வதந்திகள்
தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் வெளியேறிய உடனே, ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து பதிவிட்ட (Collaborative posts) புகைப்படங்களை நீக்கிவிட்டதாகவும், அந்த அணியின் அதிகாரப்பூர்வ கணக்கை 'அன்பாலோ' (Unfollow) செய்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. இந்த சீசனில் அணியின் மோசமான செயல்பாடு காரணமாக, அவருக்கும் நிர்வாகத்திற்கும் இடையே மோதல் வெடித்திருக்கலாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி?
ஆனால், பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை உற்று நோக்கினால் இந்தத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பது தெரிகிறது. 2026 ஐபிஎல் தொடர்பான பதிவுகள் அவரது பக்கத்தில் குறைவாக இருந்தாலும், மார்ச் 23 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து அவர் பதிவிட்ட புகைப்படம் இன்னும் அவரது பக்கத்தில் அப்படியே உள்ளது. அதுமட்டுமின்றி, அவர் இன்னமும் மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்ந்து (Follow) வருகிறார். இதன் மூலம், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளில் உண்மை ஏதுமில்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், அடுத்த சீசனை முன்னிட்டு மும்பை அணியில் பெரிய மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















