Border Gavaskar Trophy: இந்தியா ஆஸி., இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடத்தப்படவிருந்த இடம் மாற்றம்..!
Border Gavaskar Trophy: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது போட்டி அங்கு நடைபெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Border Gavaskar Trophy: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது போட்டி அங்கு நடைபெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களுக்கு மத்தியில், ஒரு ஊடக அறிக்கை இப்போது அதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உயர் அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் மூன்றாவது டெஸ்ட், நாட்டின் மிக அழகிய சர்வதேச கிரிக்கெட் மைதானமான தர்மசாலாவில் நடத்தப்படாது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் (HPCA) டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளத்தையும் அவுட்ஃபீல்டையும் தயார் நிலையில் வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தாலும், அதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்று தெரிகிறது. தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1 முதல் 5 வரை நடைபெற உள்ளதால் மைதானம் அதற்குள் முழுவதுமாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” எனவும் கூறியுள்ளார்.
அதேபோல் தரம்ஷாலாவில் உள்ள HPCA ஸ்டேடியம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, தற்போது சர்வதேச கிரிக்கெட்டை நடத்துவதற்கு ஏற்றதாக இல்லை. நடந்துகொண்டிருக்கும் ரஞ்சி சீசனின் இமாச்சலப் பிரதேசத்தின் சொந்தப் போட்டிகளும் இதே காரணத்தால் தர்மசாலாவில் நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சரியான நேரத்தில் ஆடுகளம் தயாரானாலும், மைதானத்தின் அவுட்ஃபீல்டில் புல் இல்லாமல் திட்டுகளாக உள்ளது. இருப்பினும், இது தொடர்பாக பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புனே, விசாகப்பட்டினம், இந்தூர் அல்லது ராஜ்கோட் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டியை மாற்றலாம் எனவும் கூறப்படுகிறது.
நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைதொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அபார சதம் மற்றும் ஜடேஜா, அக்சர் படேலின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 400 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
சீட்டுக்கட்டாய் சரிந்த ஆஸ்திரேலியா:
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. குறிப்பாக, தமிழக வீரர் அஸ்வின் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். கவாஜா, வார்னர் என 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுக்கும் 31வது 5-விக்கெட்டுகள் இதுவாகும். அவருக்கு பக்க பலமாக ஜடேஜா மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். படேல் ஒரு விக்கெட்டை வீழ்தினார்.
இன்னிங்ஸ் வெற்றி:
இதனால் அந்த அணி, 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 25 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்கில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 132 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

