BCCI: இனிமே இதை செஞ்சா தான் இந்திய அணியில் வாய்ப்பு?..பிசிசிஐ எடுத்த புதிய முடிவு
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதை தாண்டி, ஒரு பெரும் உணர்வாகவும் இது மாறியுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த விளையாட்டு, உலக அளவில் மிகப்பெரும் வணிகமாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் தான், இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து, ஆசியக்கோப்பை, டீ-20 உலகக்கோப்பை தொடர் மற்றும் வங்கதேசத்துடனுடான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் தோல்வியை சந்தித்தது. இதனால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
வீரர்களுக்கு கட்டுப்பாடு:
அந்த வகையில் இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்ததில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். இந்திய அணிக்கு தேர்வு பெற கட்டாயம் யோ-யோ, DEXA பயிற்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் விளையாட்டை தேசிய கிரிக்கெட் அகாடெமியின் அதிகாரிகள் கண்காணிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது.
வீரர்களின் தேர்வு:
முன்னதாக, ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் டிராபி போன்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கும் முறை ஆரம்ப காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அதைதொடர்ந்து, ஐபிஎல் தொடர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2 கி.மீ. பரிசோதனை:
இந்திய வீரர்களின் உடற்தகுதிக்கு ஏற்கனவே பிசிசிஐ அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. ஏற்கனவே, இந்திய வீரர்களுக்கான பயிற்சி திட்டத்தில் வேகம் மற்றும் சகிப்புத்தன்மையின் அளவை பரிசோதிக்க 2 கி.மீ நேர சோதனை பின்பற்றப்படுகிறது. அதன்படி, வேகப்பந்து வீச்சாளர்களுக்கான அளவுகோல் 8 நிமிடங்கள் 15 வினாடிகள் இருக்கும். அதாவது அவர்கள் 2 கிலோ மீட்டர் தொலைவை 8 நிமிடங்கள் 15 வினாடிகளில் கடக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளரகளுக்கு, தரநிலை 8 நிமிடங்கள் 30 வினாடிகள் இருக்கும். அதாவது அவர்கள் 2 கிலோ மீட்டர் தொலைவை 8 நிமிடங்கள் 30வினாடிகளில் கடக்க வேண்டும். அதேபோல், எலைட் தரத்தில் உள்ள வீரர்கள் சுமார் 6 நிமிடங்களில் மற்றும் அமெச்சூர் வீரர்கள் 15 நிமிடங்களில் 2 கி.மீ தொலைவை கடக்க வேண்டும் என கூறப்படுகிறது.
யோ-யோ டெஸ்ட்:
இந்திய அணியில் தேர்வாக யோ யோ டெஸ்ட் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில், தேறவில்லை என்றால் அணியில் இடம்பிடிக்க முடியாது. யோ-யோ இன்டெர்மிட்டன்ட் ரெக்கவரி டெஸ்ட் தற்போது கிரிக்கெட் அணித்தேர்வுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியது. 20 மீட்டர் நீளமுள்ள இடத்தைத் தேர்வுசெய்து, 20 மீட்டரின் தொடக்கத்தை ஆரம்ப புள்ளியாகவும், அதன் இறுதியை முடிவு புள்ளியாகவும் குறித்துக்கொள்வார்கள். யோ-யோ டெஸ்ட்டில் பங்குபெறும் வீரர் இந்த 20 மீட்டரின் ஆரம்ப மற்றும் முடிவு புள்ளிகளை ஓடிச்சென்று மாறி, மாறி தொட்டு வர வேண்டும். 40 விநாடிகளில் எத்தனை முறை அந்த இரண்டு புள்ளிகளையும் தொட்டு வர முடிகிறது என்பதைப் பொறுத்து அதில் கலந்துகொண்ட வீரருக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் லெவலில் அந்த வீரர் 8 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட வேண்டியது இருக்கும். அடுத்த லெவலில் 11.5 கிலோமீட்டராக வேகம் அதிகரிக்கப்படும். இதுபோல் மொத்தம் 23 லெவல்கள் உள்ளன. ஒவ்வொரு லெவலுக்கும் வீரரின் ஓடும் வேகம் அதிகரிக்கப்படும். இந்த 23 கட்டங்கள் ஒவ்வொன்றும் 40 நிமிடங்கள் நடைபெறும். ஒவ்வொரு கட்டத்துக்கும் இடையே அந்த வீரருக்கு 10 விநாடிகள் ஓய்வு வழங்கப்படும். இதில் வெற்றி பெறுவர்களுக்கே இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.