Under 19 Cricket: உலககோப்பை இந்திய அணியில் ஒரே ஒரு தமிழ்நாடு வீரர்: உ.பி., மகாராஷ்ட்ராவிற்கு முக்கியத்துவம்!
19 வயதிற்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் உத்தரபிரதேச மற்றும் மகாராஷ்ட்ரா வீரர்களுக்கு வாய்ப்புகள் வாரி வழங்கப்பட்டுள்ளது.
19 வயதிற்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் அடுத்தாண்டு மேற்கிந்திய தீவுகள் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. நேற்று அறிவித்தது. கேப்டன் யஷ் துல் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள ஹர்னூர் சிங், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, எஸ்.கே. ரஷீத், நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனீஸ்வர் கவுதம், தினேஷ் பானா, ஆராதா யாதவ், ராஜ் அங்கட்பாவா, மானவ் பாரக், கவுசல் டாம்பே, ஆர்.எஸ்.ஹங்கர்கேகர், வாசு வாட்ஸ், விக்கி ஓஸ்ட்வால், ரவிகுமார் மற்றும் கார்வ் சங்க்வான் இடம்பிடித்துள்ளனர். எஸ்.கே.ரஷீத் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆராத்யா யாதவும், தினேஷ் பானாவும் விக்கெட் கீப்பர்களாக இடம்பிடித்துள்ளனர்.
Here's India's squad for ICC U19 Cricket World Cup 2022 squad 🔽 #BoysInBlue
— BCCI (@BCCI) December 19, 2021
Go well, boys! 👍 👍 pic.twitter.com/im3UYBLPXr
பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சித்தார்த் யாதவ், விக்கெட் கீப்பர் ஆராத்யா யாதவ், வாசு வாட்ஸ் ஆகிய மூன்று பேர் அணியில் இடம்பிடித்துள்ளனர். தமிழ்நாடு சார்பில் மானவ் பராக் என்ற வீரர் இடம்பெற்றுள்ளார். கேப்டன் யஷ்துல் டெல்லியைச் சேர்ந்தவர்.
ஹரியானா மாநிலத்தில் இருந்து நிஷாந்த் சிந்து, விக்கெட் கீப்பர் தினேஷ் பானா, கர்வ் சங்கன் ஆகிய மூன்று வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து கவுசல் டாம்பே, ஆர்.எஸ்.ஹங்கரேகர், விக்கி ஓஸ்ட்வால் ஆகிய மூன்று வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். சண்டிகரில் இருந்து ஹர்னூர் சிங், ராஜ் அங்கட் பாவா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் இருந்து ரவிகுமார் என்ற ஒரு வீரர் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
மானவ் பராக் தவிர தென்னிந்தியாவில் இருந்து ஆந்திரா சார்பில் துணை கேப்டன் எஸ்.கே.ரஷீத், கர்நாடகா சார்பில் அனீஸ்வர் கவுதம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஸ்டான்பை வீரர்களிலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ரிஷித் ரெட்டி மட்டுமே இடம்பிடித்துள்ளனர். இந்த தொடருக்கான முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், மேற்கிந்திய தீவுகளும் வரும் ஜனவரி 14-ந் தேதி மோதுகின்றன. அதே தேதியில், ஸ்காட்லாந்து அணியை இலங்கை அணி எதிர்கொள்கிறது. குரூப் ஆட்டங்கள் 14-ந் தேதி தொடங்கி ஜனவரி 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அரையிறுதிப்போட்டிகள் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும், இறுதிப்போட்டி 5-ந் தேதியும் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்